தெள்ளிதின் உணர்ந்த அருணகிரி நாத சுவாமிகளேயன்றி யார்தான் இதனை விளக்கவல்லார்? “மூலங்கில ரோருரு வாய்நடு நாலங்குல மேனடு வேரிடை மூள் பிங்கலை நாடியொ டாடிய முதல்வோர்கள் மூணும்பிர காசம தாயொரு சூலம்பெற வோடிய வாயுவை மூலந்திகழ் தூண்விழியேயள விடவோடி” - திருப்புகழ். அங்ஙனம் கழுமுனை வழியே செலுத்தும் பிராண வாயுவை முறைப்படி சுவதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்கினை யென்ற ஐந்து ஆதாரங்களில் நிறுத்தி பிரமரந்திரத்தில் செலுத்தி அதற்குமேல் சகஸ்ரார கமலமாகிய துவா தசாந்த்தில் செலுத்துதல் வேண்டும். இந்துவாகை:- இந்து-சந்திரன். இந்துவாகை ஆர-சந்திரகாந்தி நிரம்ப. மூணுபதி:- சந்திரமண்டலம், சூரியமண்டலம், அக்கினி மண்டலம். விந்துநாத ஓசையாலும்....................அமுத சித்தி:- மூலாதாரத்தில மூண்டெழுங் கனலை காலா லெழுப்புங் கருத்தறிந்து முறைப்படி எழுப்பி மதிமண்டலத்தில் தாக்கச் செய்வதால் அமிர்ததாரை பொங்கி வழியும். வாயு அடங்கி உடம்பெஞ்கும் வியாபிப்பதால் தசவித நாதங்கள் உண்டாகும். “அங்கிதனை முட்டி அண்ட மொடு தாவி விந்து ஒலி கத்த மந்திரவதான வெண்புரவி மிசையேறி” -(கட்டிமுண்ட) திருப்புகழ். “நாளுமதிவேக கால்கொண்டு தீமண்ட வாசியன லுடுபோயொன்றி வானின்க ணாமமதி மீதி லூறுங் கலாயின்ப அமுதூறல் நாடியதன்மீது போயொன்றி ஆனந்த மேலை வெளியேறி நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே” - (மூளும்வினை) திருப்புகழ். என்றுவரும் அநுபவத் தெளிவுகளாகத் திகழும் அருமைத் திருப்புகழ்டிகளாற் றெளிக. ஊமையேனை:- சிவயோகநிலையில் சித்திர தீபம் போல் அசைவற நிற்பதனால் |