பேசா அநுபூதி பிறக்கும். சொல்லறச் சும்மாயிருத்தல், அந்நிலைபெற விரும்புவதனால் ஊமையேன் என்றனர். “உரையவிழ வுணர்வவிழ உளமவிழ உயிரவிழ உளபடியை உணருமவ ரநூபூதியானதுவும்” - திருவகுப்பு. மூலவாசல் வெளிவிட்டு:- பிரமரந்திர வழி திறத்தல். “தங்கிய தவத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெளிக்குவழி அருள்வாயே” - (ஐங்கரனை) திருப்புகழ். வாசி வாணிகள்.............................செங்கையாளி:- மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டுபோன செல்வத்தைத் திருப்பணியில் செலவழித்து குருந்தடியிற் குருவருள் பெற்று சிவஞான போதச் செல்வராயமர்ந்திருந்தனர். சிவபெருமான் அவர் பொருட்டு நரிகளைப் பரிகளாக்கி வேதப்புரவி மீது குதிரைச் சேவகராக மதுரையிற் சென்று பாண்டியனிடம் குதிரை விற்று மணிவாசகரை யாட்கொண்டருளினார். “பரியென்ப நரிகள்தமை நடனங்கொடொருவழுதி பரிதுஞ்சவருமதுரை நடராஜன்” - (திரவஞ்ச) திருப்புகழ். ஏனைய அன்பர்கள் பற்பல செயற்கருஞ் செயல்களாந் திருத்தொண்டு புரிந்து பெருமானுக்கு அடிமைப்பட்டனர். சிவப்ரகாச சுவாமிகள் கூறுமாறு காண்க. “கடல்நிற வண்ணன் கண்ணொன் றிடந்து மறைச்சிலம் பாற்று மலரடிக் கணியப் பரிதி கொடுத்த சுருதி நாயகற்கு முடிவிளக் கெரித்தும் கடிமலர்க் கோரைச் சுரிகுழற் கருங்கட்டுணைவியை யளித்தும் அருமகள் நறும்பூங்கருமயி ருதவியும் நென்முளைவாரி இன்னமு தருத்தியும் கோவண நேர்தனை நிறுத்துக் கொடுத்தும் அகப்படு மணிமீன்அரற்கென விடுத்தும் பூட்டி யரிவாள் ஊட்டி யரிந்தும் தலையுடை யொலிக்கும்சிலையிடை மோதியும் மொய்ம்மலர்க்கோரை கைம்மலர் துணித்தும் தந்தையைத் தடிந்தும்மைந்தனைக் கொன்றும் குற்றஞ் செய்த சுற்றங் களைந்தும் பூக்கொளு மாதர்மூக்கினை யரிந்தும் இளமுலை மாதர் வளமை துறந்தும் பண்டைநாள் ஒரு சிலர் தொண்டராயினர்” |