வணங்கத் தெரியாத முழு மூடனை, உமது புகழை ஓதி உண்மை ஞானத்தைப் பெறச் செய்யும் நாள் ஒன்று எனக்கு உண்டாகுமோ? விரிவுரை கருவாகியெ தாயுதரத்தினில் உருவாகவே:- உயிர்கள் அநேக பிறவிகளில் செய்த புண்ணியத்தால் மனிதப் பிறப்பில் வருகின்றன. தாயின் வயிற்றில் கருவில் உருவாகி கண் காது முதலிய அங்கங்களை இறைவன் அமைத்துத்தரப் பெறுகின்றோம். இந்த மனித உடம்பு பலப்பல கருவிகளுடன் கூடிய அழகிய படைப்பு. அதியற்புதமானது. நரைமாதர் கையிலே விழவேகி:- நரைமாது-மருத்துவச்சி. மகவைப் பெறும்போது அருகில் இருந்து உதவி செய்கின்ற அவள் கையில் குழந்தை வந்து விழுகின்றது. அணைத்துயிலென:- அணை-படுக்கை. படுக்கையில் தூங்குக என்று தாய் தாலாட்டித் தூங்க வைப்பாள். தமிழ் நாட்டில் தாலாட்டும் பாட்டிலேயே பல அரிய உண்மைகள் அடங்கிக் கிடக்கும். கருதாய்:- கருது ஆய். குழந்தையின் நலத்தையே எண்ணுகின்ற அன்னை, தருதாரமுமாகிய சுற்றமு நலவாழ்வு நிலாத பொருட்பதி சதமாயிதுதானென:- பெண் வீட்டார் கன்னிகாதானமாகத் தந்த மனைவி, சுற்றத்தார்கள், நல்லவாழ்வு, நிலையில்லாத செல்வம், ஊர் முதலியவற்றை அறிவின்மையால் என்றும் சதம் என்று மாந்தர் கருதி மாய்கின்றனர். நிலலாதவற்றை நிலையின் என்று புணரும் புல்லறிவாணமை கடை திருக்குறள். உனதாளிணையைத் தொழ அறியாத நிர் மூடனை:- இறைவனுடைய திருவடியைத் தொழுதால் நிலையான பேரின்பங் கிடைக்கும். இறைவனைத் தொழுதவரை உலகமெல்லாந் தொழும். அப்பரமனைத் தொழாதார் வறியராய் எல்லோரையுந் தொழுது அழுது அவல நிலையில் அல்லல் படுவர். |