பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 395

 

பெண்மயலால் பீடித்து, வருந்துகின்ற அடியேனை, ‘அன்பனே! உனக்கு என்ன மயக்கம் சொல்லக்கடவாய்” என்று தடுத்து என் மயலை அயலாக்கி யருள்புரியவேண்டும்.

வாரம் வைத்த பாதம் இதோ என அருள்வாயே:-

வாரம்-அன்பு. “நீ அன்பு  வைத்த திருவடி இதோ இருக்கின்றது என்று காட்டி திருவடிப்பேற்றை அருள்வீர்” என்று பிரார்த்திக்கின்றனர்; இதோ இதோ என்று இரண்டில் முன்னையதைச் சுட்டாகவும், பின்னையதை இது ஓ எனப் பிரித்தும் இத்திருவடியே ஓகார மந்திரம் என்று கூறுவாரும் உளர்.

அறிவித்தாலன்றி ஆன்மா அறியாது. பசுத்தன்மை தானே யறியாது. இறைவன் அறிவு அறிவிக்க அறியு மியல்புடையது. கண் கதிரொளி துணை புரிந்தாலல்லது தானே காணாது. கண்ணொளி போல் ஆன்ம அறிவு; கதிரொளிபோல் இறைவனுடைய அறிவு. ஆதலின், “பாதம் இதோ” என்று இறைவன் தனது திருவடியைக் காட்ட அவனருளே கண்ணாகக் கொண்டு காணவேண்டும்.

அங்ஙனம் இறைவன்காட்டக் கண்டவர் அப்பமூர்த்திகள்.

“கண்டேனவர்திருப் பாதங் கண்டறியாதன கண்டேன்”
                                                     - தேவாரம்.

பாரதத்தை மேருவெளீ................................................வரைபவர்:-

இதிகாசங்கள் மூன்றனுள் ஒன்று பாரதம். பரத வமிசத்தார் சரித மாதவின் பாரதம் எனப்பட்டது; தத்திதாந்த நாமம். வடமொழியில் விரிந்த விழுமிய காவியம். அதனை வியாசர் கூற விநாயகர் எழுதினார் எனில் அதன் பெருமையை அளவிட வல்லார் யாவர்?

பாரதம் எழுதிய வரலாறு

கிருஷ்ணத்வைபாயனர் என்னும் வேதவியாசர் இமாசலத்தில் மூன்று ஆண்டுகள் யோகத்தில் அசைவற்றிருந்தனர். அந்த யோகக் காட்சியில் கண்ட பாரத வரலாற்றைச் சுலோக வடிவாகப் பாட வேண்டுமென்று துணிந்தனர். பாடுகின்ற கவிவாணன் பக்கலில் எழுதுகின்றவன் வேறு இருத்தல் அவசியம். பாடுகின்றவனே எழுதினால் பாடுகின்ற கவனசக்தி தடைப்படும். எழுதுகின்றவர் சிறந்த மதிநலம் வாய்ந்தவராக இருத்தல் அதனினும் அவசியம். பதங்களிலுள்ள எழுத்துக்களைச் சிறிது இடம் பெயர்த்து நிலை மொழியின் ஈற்றெழுத்தை வருமொழியோடு சேர்த்துவிட்டால் பேராபத்தாக முடிந்துவிடும். உதாரணமாக;

மாதேவா சம்போ கந்தா என்ற பதங்களை எழுதுகின்றவன்