பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 397

 

பொருளைச் சிந்திப்பதற்குள் பல சுலோகங்களை உள்ளத்தில் ஆவாகனம் பண்ணிக் கொண்டனர். இப்படியாக விநாயகர் சிந்தித்து எழுதும் பொருட்டு வியாசர் கூறிய சுலோகங்கள் எண்ணாயிரத்து எண்ணூறு. வியாசர், “இதற்குப் பொருள் எனக்கு தெரியும்; என் மைந்தன் சுகனுக்குத் தெரியும்., சஞ்சயனுக்குத் தெரியுமோ தெரியாதோ” என்று அநுக்கிரமணிகா பர்வதத்தில் கூறியிருக்கின்றனர்,

வியாசர் மொத்தம்பாடிய சுலோகங்கள் 60 லட்சம்.

“பகைகொள் துரியோதனன் பிறந்து
படைபொருத பாரதந்தெரிந்து
பரிய தொரு கோடு கொண்டு சண்ட   வரைமீதே
பழுதற வியாசனன் றியம்ப
எழுதியவிநாயகன்சிவந்த
பவளமத யானை பின்பு வந்த  முருகோனே”
                                  - (குகையினால்) திருப்புகழ்.

பாடன் முக்ய மாது........................பாசமற்ற வேதகுரு:-

சிறந்த பாடல்களோடு கூடியது தமிழ்; தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, திருமந்திரம் முதலிய மிகச் சிறந்த பாடல்களால் அலங்கரிக்கப் பெற்ற மொழி தமிழ் மொழியேயாம். “வேதப் பாடலினும் விழுமியது திருவாசகப் பாடல்” என்றார் சிவப்பிரகாச சுவாமிகள்.

“விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
   காரண னுரையெனும் ஆரண மொழியோ
   மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
   யாதோ சிறந்த தென்குவீராயின்
   வேத மோதின் விழிநீர் பெருக்கி
   நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
   திருவா சகமிங்கொருதா லோதின்
   கருங்கன் மனமுங் கரைந்துக் கண்கள்
   தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய
   மெய்ம்மயி்ர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
   அன்பராகுந ரன்றி
   மன்பதையுலகின் மற்றைய ரிலரே”

இத்தகைய பாடல்களையுடைய தமிழ்மொழிக்குத் தலைவர் அகத்திய முனிவர். தமிழ்-இனிமை.

“இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்” - நிகண்டு