பக்கம் எண் :


398 திருப்புகழ் விரிவுரை

 

அகத்தியமுனிவருக்குப் பிரணவோபதேசத்தை முருகவேள் புரிந்தருளினார். முருகக்கடவுளுடைய முக்கிய சீடர்கள் மூவர், சிவபெருமான், அகத்திய முனிவர், அருணகிரிநாதர்.

வேலா சரணஞ் சரணமென் மேல்வெகுளாமலினி
மேலா யினுங் கடைக் கண்பார் பருப்பத வேந்தன்மகள்
பாலா குறுமுனி யார்க்குந் திருப்புகழ்ப் பண்ணவர்க்கும்
ஆலால முண்டவர்க்கும் உபதேசித்தவை னாண்டவனே.
                                                              -முருகரந்தாதி

போர்மிகுத்த சூரன்................பூமியுக்க விசுகுகா:-

சூரபன்மன் தேவர்களையும்இந்திரன் மகனாகிய சயந்தனையுந் தேவமாதர்களையும் சிறைப்படுத்தித் துன்புறுத்தினான். பலயுகங்களாகப் பதைபதைத்த தேவர்கள் “இனி உய்வு உண்டோ” என ஏங்கினர்.

“தண்டேன் நுளிக்குந் தருநிழற்கீழ் வாழ்கை வெஃகிக்
   கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோதென்றே
   கண்டேன் பிறர்தம்பதத் தொலைவுங் கண்டனனால்
   தொண்டேன் சிவனேநின் தொல்பதமே வேண்டுவேன்”

என்று சயந்தன் புலம்பினான்.

முடிவில் இந்தினாதியிமையவர் இளம்பூரணனாகிய எந்தை கந்தவேள் திருமுன் சென்று, “வால குமார குகா கந்தா வேலா மயிலா” என்று வழுத்தி வணங்கினார்கள். முருகவேள் படையுடன் புறப்பட்டு செந்திமாநகரம் வந்து திருக்கோயிலில் வீற்றிருந்தனர். அரசநீதிப்படி தேவர்கள், சிறையை விடுவிக்குமாறு வீரவாகு தேவரைத் தூது அனுப்பினார். வீரவாகு தேவர் அஞ்சாநெஞ்சுடன் தன்னந்தனியாக தனது தோளும் வாளும் துணையாகக் கொண்டு சூரபன்மன் பேரவைக்குள் பெருமிதமாகச் சென்றனர்.

நவரத்தின சிங்காசனத்தை முருகனருளால் தருவித்து அதன் மீதிருந்து முருகன் முழுமுதற்றன்மை முழுவதும் கூறியருளினார். “அடா சூரபன்மனே! தேவர்களைச் சிறைவிடுமாறு கந்தக் கடவுளின் கட்டனை. முழுமுதலாகிய முருகவேளின் மொழியைத்தட்டாதே” என்று பலப்பல நீதிகளைப் பகர்ந்தார் சூரபன்மன் கைகொட்டி நகைத்து,

“எண்ணிலாததோர் பாலகன் என்னை வெல்லனென்கை
   விண்ணிலா தவன் றன்னையோர் கனியென வெஃகிக்
   கண்ணிலாதவன் காட்டிடக் கையிலாதவன் போய்
   உண்ணிலாத பேராசையாற் பற்றுமா றொக்கும்”