சிவபெருமானுடைய நெற்றிக்கண்களினின்றும் ஆறு சுயஞ்ஜோதி அருள் தீப் பொறிகள் தோன்றின. அவற்றை அரனார் ஆணையின்படி வாயுதேவனும் அக்கினி தேவனும் கங்கையிலிட்டனர்; கங்கை சரவணத்திற் சேர்த்தனள். ஆங்கு திருமுருகர் ஆறுமுக வடிவுகொண்டு திருவவதரித்தனர். அருவமு முருவுமாகி யநாதியாய்ப் பலவாயொன்றாப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்களாறுங் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டு ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தன னுலகமுய்ய. மனிதர் விலங்கு முதலிய இடத்தினின்றும் அவதரித்த ஏனைய தேவர்களின் அவதாரம் போலன்றி பிறவாயிறவா பெற்றியுடைய பெம்மான் முருகன், பரஞ்சுடர் நெற்றியந் தலத்தினின்றும் வெளிப்பட்டு, சரவணப் பொய்கையில் அருளுருக்கொண்டு உலகங்களை யுய்வித்தனர். சரம்-நாணல்; வனம்-காடு. சிறந்த நரம்புகளால் சூழப்பெற்ற இதய கமலத்தின் நடுவினுள் தகராலயத்தில்குகப்பெருமான் வீற்றிருக்கின்றனன் என்ற உள்ளுறையையும், “சரவணஜாதா” என்ற சொற்றொடர் உணர்த்துகின்றது. கருணையதீதா :- அதீதம்-கடந்தது; மனவாசகங் கடந்ததும், மறைகளின் முடிவாலும் ஆகமங்களாலும் அளக்கற்கரியதுமாகிய பரம் பொருள் நம்பொருட்டு கருணைகூர் முகங்கள் ஆறுங் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டு எழுந்தருளினன். சமதாளவூரா :- சமதளவூரா என்பது திருப்போரூர், அது செங்கற்பட்டுக்கு அருகே விளங்கும் அருமைத் திருத்தலம். திருப்போரூர்த் தல வரலாறு தாரகன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான் (இவன் சூரபன்மன் தம்பியாகிய தாரகனன்று). இவனுக்கு கமலாட்சன், தாரகாட்சன், வித்யுன்மாலி என்று மூன்று புதல்வர் இருந்தனர். இவரே திரிபுரத்தசுரர். தாரகன் தேவவருடம் ஐம்பதினாயிரம் ஆண்டு கடுந்தவம் புரிந்தனன். பிரமதேவர் தோன்றி வேண்டிய வரங்களை நல்கினர். அதனால் தாரகன் தருக்குற்ற மூவுலகங்களையும் வென்று தேவரும் மற்று யாவரும் தனது ஏவல் கேட்ப அரசு புரிவானாயினான். திருமால் முதலிய யாவரையுங் கடந்தவனாதலின் தாரகன் என்று |