பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 401

 

சென்று, போர்க்களத்தில் இருந்த யானைகளையும், தேர்களையும் தூளாக்கி, பத்துத் தலைகளையுடைய இராவணனை அன்பினால் அழித்த அண்ணலாகிய திருமாலின் திருமருகரே! போருக்கு முடுகிவந்த சூரபத்மரின் தலையில் உள்ள மூளை தூளாகி முடியுமாறு நடனம்புரிந்த மயில் வீரரே! முனிவர்களும் தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தத் தலமான சோலைமாமலைக்குள் வீற்றிருக்கும் முருகக்கடவுளே! வேலவரே! தியாமூர்த்தியாம் சிவபெருமான் பெற்ற பெருமிதமுடையவரே! துடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றி, இளமையுடன் கூடிய மேனியில் கோழை நெருக்க, இருமல் ஈளை வாதம் பித்தம் என்கின்ற நோய்கள் அடியேனை வந்து அணுகாத வண்ணம், அறத்துறைகளுடன் கூடிய வாழ்வைவிட்டு, உலக நூல்களைக் கற்க வேண்டிய வேதனை நீங்கிச் சுகத்தைக் கொண்ட அநுபூதியைப் பெற்று அடியேன் மகிழாமல், உடலை வளர்க்கும் கோரமான பாழான வயிற்றை நாள்தோறும் உணவினால் வளரச் செய்து, உயிர் நீடித்து வளரும்படியான யோகசித்திகளைப் பெறுவது நன்றன்று; உருவம் கடந்த பாழ் வெளியில், வெட்ட வெளியில் நாத கிதத்துடன் நடனம் புரிகின்றவரே! உமது ஞானமேயான திருவடியை அடியேன் அடைவேனோ?

விரிவுரை

துடிகொணோய்களோடு வற்றி:-

துடிகொள்நோய்கள். உயிரையும் உள்ளத்தையும் உடம்பையும் துடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றுகின்றது.

தருணமேனி கோழை துற்ற:-

தருணம்-இளமை. இளமையுடைய மேனி கெடுமாறு கோழை பொங்கி நெருக்க.

துறைகளோடு வாழ்வு விட்டு:-

துறை-வழி. இல்லநெறி, துறவறநெறி எனவும், தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சன்மார்க்கம், எனவும்பலவழிகள் வாழ்வில் திகழ்கின்றன. இத்தகைய வழிகளுடன் கூடிய வாழ்வைத் துறந்து விலகி நிற்கின்றனர் மனிதர்.

உலகநூல்கள் வாதை யற்று:-

உலகநூல்-பௌதிகநூல். அணுவைப்பற்றி, நீரைப்பற்றி, மலையைப்பற்றி, சந்திரனைப்பற்றி, சூரியனைப்பற்றி, இன்னோரன்ன பொருள்களைப்பற்றி,, ஆராய்கின்ற நூல்கள். இவைகளைக் கற்பதனால் ஆன்ம லாபம் ஏற்படாது. முத்தி சித்திக்காது. அதனால்