அவைகைளக் கற்பதனால் எய்துகின்ற துன்பம் அறவேண்டும் என்கின்றார். சுகமுளாறுபூதி பெற்று மகிழாமே:- எல்லா உயிர்களும் சுகத்தை விரும்புவது இயல்பு. சுகம் அநுபூதியில் கிடைக்கின்றது. அநுபூதி என்ற சொல்லுக்கு தொடர்ந்து ஒன்று படுதல் என்று பொருள். அநுபூதி எப்படி இனிக்கும் என்பதை அருணகிரிநாதர் பிறிதொரு திருப்புகழில் கூறுகின்றார். “ஆராமுத மானசர்க் கரைரதேனே ஆன அநுபூதியைத் தருவாயே” - (நாரியர்கள்) திருப்புகழ் உடல்செய் கோர பாழ் வயிற்றை நிதமு மூணி னாலுயர்த்தி:- நன்றி கெட்டவர்கள் எல்லோர்க்கும் தலைமை தாங்கும் பெருமையும் அருமையும் உடையது வயிறு. இந்த வயிற்றுப் பெருமான் உலகத்தில் உள்ள எல்லோரையும் ஆட்டி வைக்கின்றான். ஆ! ஆ! இந்த வயிற்றுக்காக எத்தனை ஆட்டம்; எத்தனை கூட்டம்; என்ன என்ன நாட்டம்; எங்கெல்லாமோ ஓட்டம். பிறந்தநாள் தொடங்கி இந்த பாழ் வயிற்றுக்குத் தினம் ஒன்றுக்கு நான்கு வேளை உணவு இடுகின்றோம். ஒரு நாள் உணவு தர வசதியில்லையானால் இந்த நன்றி கெட்ட வயிறு நம்மைப் படுத்துகின்றபாடு கொஞ்சநஞமன்று. வாழ்நாள் முழுதும் வயிற்றை வளர்ப்பதிலேயே முடிவு பெறுகின்றது; மனிதர்களுக்கு அதிலேயே நாட்டம். “அலவ வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதில்நினைவாய்க் கவலைப் படுவ தன்றிசிவ கனியைச் சேரக் கருதுகிலேன்” - திருவருட்பா. உயிரினீடு யோகசித்தி பெறலாமே:- உயிர் வாழ்க்கையை நெடுங்காலம் நிடிக்கச் செய்யும் திறனுடையது யோகம். எத்தனை யுகங்கள் இருப்பினும் ஒரு நாள் அழியக் கூடிய உடம்புதானே! இதைக் கருதாமல், ஹடயோகம் முதலியவற்றைக் கைக்கொண்டு நிற்றல் தக்கதன்று. உருவிலாத பாழில் வெட்ட வெளியிலாடு நாதநிர்த்த:- உருவிலாத பாழ்-உருவம், செயல், பேர், ஊர் முதலிய யாவும் அற்ற சுத்தப் பாழ். “வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியை” - கந்தரலங்காரம் (8) |