ஆசித் தார்மன திற்புகு முத்தம கூடற் கேவைகை யிற்கரை கட்டிட ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி படுவோனோ டாரத் தோடகி லுற்றத ரக்குல மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் பெருமாளே. பதவுரை தேசி கானகம்உற்று அ தினைபுனம் மேவி-அழகிய காட்டில் சென்று அந்த தினைப்புனத்தை யடைந்து, காவல் கவண்கல் சுழற்றுவள்-அங்கு காவல்புரிந்து கவணில் கல்லை வைத்துச் சுழற்றுவளும், சீதபாத-குளிர்ந்த திருவடியை யுடையவளுமாகிய, குறபெண் மகிழ்ச்சி கொள் மணவாளா- குறமகளாகிய வள்ளிநாயகி மகிழ்ச்சி கொள்ளுகின்ற மணவாளரே! தேடிபாடிய- தலங்கள்தோறும் தேடிச் சென்று செந்தமிழ்ப் பாடல்கள் பாடிய, சொல் புலவர்க்கு-இனிய சொற்களையுடைய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, இதம் ஆக- இன்பந்தரவேண்டி, தூதுசெல் அத்தரில் கற்பக-தூது சென்ற சிவபெருமானிடத்தில் தோன்றிய கற்பகமே! தேவர்க்கு ஆதி-தேவர்கட்குத் தலைவரே! திருபுகலி பதி வருவோனே-சிறந்த சீகாழியில் சம்பந்தராய் வந்தவரே! ஆசித்தார் மனதில் புகும் உத்தம-விரும்பி வாழ்த்துவோருடைய மனதில் புகும் உத்தமரே! கூடற்கே-மதுரையில், வைகையில் கரை கட்டிட- வைகைநதியில் வெள்ளம் வந்தபோது கரை கட்டும் பொருட்டு, ஆள் ஒப்பாய்- ஆளாக ஒப்புக் கொண்டு, உதிர்பிட்டு அமுதுக்கு-உதிர்ந்த பிட்டமுதத்தை வேண்டி, அடி படுவோனோடு-அடிபட்ட சொக்கநாதரோடு, ஆரத்தோடு- சந்தனமரமும், அகில் உற்ற தரு இலம்-அகில் மரமும் உள்ள மரக்கூட்டங்கள், மேகத்தோடு ஒருமித்து நெருங்கிய-மேகத்துடன் ஒன்றுபட்டு நெருங்கியுள்ள, ஆதி சோலை மலைபதியில் திகழ்-பழமையான சோலைமலை என்ற தலத்தில் விளங்குகின்ற, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! பாசத்தால்-தம்மிடம் வருபவர்கள் தம்மீது வைத்த ஆசைக்கு ஏற்ப, விலைகட்டிய பொட்டிகள்- விலைபேசி முடிவு செய்யும் வேசிகள்; நேசித்தார் அவர் சித்தம் மருட்டிகள்- தம்தை நேசித்தவர்களுடைய சித்தத்தை மயக்குபவர்கள்; பார பூதரம் ஒத்த தனத்திகள்-பாரமான மலையை யொத்த கொங்கையையுடையவர்கள்; மிகவே தான் பாவத்தால் மெய் எடுத்திடு பட்டிகள்.மிகுந்த பாவத்தினால் உடம்பெடுத்த விபசாரிகள்; சீவி கோதி முடித்த அளகத்திகள்-சீவியும் கோதியும் முடித்த கூந்தலையுடையவர்; பார்வைக்கே மயலை தருதுட்டிகள்-பார்வையாலேயே மோக மயக்கத்தைத் தருகின்ற துஷ்டைகள்; ஒழியாது மாசு உற்று ஒழிய- ஒழியாமல் அழுக்குப்பற்றியேறிய, பித்தளையில் பணி-பித்தளை ஆபரணங்களை, |