பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 407

 

விரிவுரை

பாசத்தால் விலை கட்டிய பொட்டிகள்:-

பொதுமகளிர் தம்மிடம் வருபவர்கள் தம்மை நேசிக்கும் அளவுக்கு ஏற்ப விலைபேசி முடிவு கட்டுவார்கள். நிதிக்கு ஏற்ப நேயங் காட்டுவார்கள்.

மிகவேதான் பாவத்தால் மெயெடுத்திடு பட்டிகள்:-

உள்ளத்தில் ஒருவர் மீதும் பற்றின்றிக் கண்டாரைத் தழுவும் படியான தீயொழுக்கம் பூண்டதனால் விலைமாதரின் உடம்பு மிகுந்த திவினைப் பயனால் வந்தது என்றார்.

பார்வைக்கே மயலைத்தரு துட்டிகள்:-

ஆடவரைப் பார்வையாலே மயக்குவர்கள் என்றார், பேச்சினாலும் தொழுவதனாலும் என்னதான் செய்ய மாட்டார்கள் என்பதை உய்த்துணர விட்டார்.

பித்தளையிற்பணி நீறிட்டே யொளிபற்ற விளக்கிகள்:-

பித்தளையிற் செய்த ஆபரணங்களை அவ்வப்பொழுது சாம்பலிட்டு விள்கி மெருகேற்றி அணிந்து கொள்வார். இதனைப் பட்டினத்து சுவாமிகளும் கூறுகின்றார்.

முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தனை ஓலை விளக்கியிட்டுப்
பட்டப்பகலில் வெளிமயக்கேசெயும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவ கச்சி யேகம்பனே.

வாய்வித்தார முரைக்கு மபத்திகள்:-

அபத்தம்-பொய். வாயில் இனிமையாக வித்தாரமாகப் பேசுவார்கள். ஆனால் அத்தனையும் பொய்மைதான்.

நேசித்தாரையுமெத்தி வடிப்பவர்:-

தம்மை மிகவும் நேசிக்கின்றவர்களையும் ஏமாற்றுவர். அன்றி தம்மிடம் வருபவர்களில் அதிகம் பொருள் தருபவர் யார் என வடிகட்டிப் பொருள் பறிப்பார்கள்.

தேசிக் கானகம்:-

தேசி-அழகு.வள்ளியம்மையார் இருந்த வனம் மிகவும் அழகியது.

தேடிப்பாடிய சொற்புலவர்:-

சுந்தரமூர்த்திக்காக இறைவன் நடு இரவில் பரவையார் திருமாளிகைக்குத் தூது சென்று அருள் புரிந்தார்.

“பரவைமனை மீதிலன்று ஒருபொழுது தூதுசென்ற பரம்”
                                             - (கருவினுரு) திருப்புகழ்.