பெரியபடை அழிந்து நிலைகுலையவும், சூரன் அலைகடலுக்குட் புகும்படி அவனைத் தாக்கியும், களிப்பு மிகுந்த மயிலை அழகுடன் நடாத்திப் போர்புரிந்த தலைவரே! இந்திரன் மகளாகிய தேவசேனைக்குத் தெரியாமல், வள்ளி மீது மனம் வைத்து குளிர்ந்த தினைகள் மிகவும் பரந்துள்ள புனத்தில் திரிந்தவரே! கொடிய கிரவுஞ்ச மலையை வேலினால் குத்தியழித்துப் போர் புரிந்து மேம்பட்ட நிலையை விள்கியவரே! சோலை மலையில் எழுந்தருளிய வீரம் பொருந்திய பெருமிதமுடையவரே! தலை மயிர் கொக்குபோல் நரைத்துூம, கல கல என்று பல் கட்டுவிடவும், தத்தித்தத்தித் தளர் நடையிட்டு நடந்து தடுமாற்றத்துடன் தடியூன்றி நடந்தும், ஒக்காளம் மிகுந்து உணவும் விலக்கி வாந்தி யெடுத்தும், சளி மிகுந்தும், பித்தம் பலகாலும் மேலிட்டும், எண்ணெயிலிட்டதுபோல் உடல் எரிச்சலுண்டாகியும், தான்றிக்காய் நெல்லிக்காய் கடுக்காய் சுக்கு திப்பிலி இவைகளையிட்டுக் கஷாயஞ் செய்து, தெளிந்தபின் வடிகட்டிப் பருகியும், உடல் மடிந்து உயிர் போவதற்குமுன், உமது திருப்புகழைக் கற்று, அதன் சொற்களைப் பயின்று, திருவடியைப் பற்றித் தொழுது, உம்மைச் சேர்ந்து, பிறப்பு ஒழியுமாறு பரமுத்திபெற அருள்புரிவீர். விரிவுரை தலைமயிர் கொக்குக் கொக்க நரைத்து:- எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்களில் எந்த உயிர்க்டுகும் நரை கிடையாது; பன்றி, யானை, காக்கை முதலியவைகட்கு உரோமம் நரைப்பதில்லை. உயர்ந்த பிறப்பு என்று கருதப்படுகின்ற மனிதனுக்கு மட்டும் நரையுண்டு. ஏன்? நரைப்பதின் காரணம் யாது? இது இறைவன் நமக்குத் தரும் வக்கீல் நோட்டீஸ். மற்ற பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும் வந்தவை. மனிதன் பிறவாமையைப் பெற வந்தவன். ஏன் பிறந்தோம் என்பதை மறந்திருந்தவனுக்கு இறைவன் செய்யும் எச்சரிக்கை நரையென வுணர்க. நரை யுண்டானவுடனே ஆசாபாசங்களையகற்றி தவநெறியில் நாட்டம் உண்டாக வேண்டும். காதின் அருகில்ஒரு நரையைக் கண்ட மாத்திரத்தில தயரதர்தவம் மேற்கொள்ள முயன்றார் என்கிறது இராமாயணம். ஒரு ரோமம் நரைத்தவுடன் ஒரு பொருளில் உள்ள பற்றையாவது விடவேண்டும். “மீனுண்கொக்கின் துவியன்ன வால்நரைக் கூந்தல்” - புறநானூறு (277) |