பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 415

 

பற்கட்டதுவிட்டு:-

பற்கள் இடையிலே முளைக்கின்றன. இடையிலேயே உதிர்ந்து விடுகின்றன.

சத்தியெடுத்து:-

சத்தி-வாந்தி. முதுமையால் வாந்தியும் விக்கலும் வந்து துன்புறுத்தும்.

“.........................................................விக்கி
   இருமாமுன் மாகாணிக் கேகாமுன் நெஞ்சே
   ஒருமாவின் கீழரையின் றோது”        - கானமேகம்.

திலதயிலத்திட்டொக்க வெரிக்க:-

கொதிக்கின்ற எண்ணெயில் இட்டதுபோல் உடம்பில் எரிச்சல் உண்டாகும். இது ஒரு நோய்.

திரிபலை:-

திரிபலை-தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காய், இந்த மூன்றுஞ் சேர்ந்தது, இது வைத்திய பரிபாஷை.

திகழ்புகழ் கற்று:-

முருகனுடைய புகழைக்கற்றவர்க்கு இருள்சேர் இருவினையுஞ் சேரா.

காலபயந் தீரும்; சீலநலஞ்சேரும்; சித்தியெலாம் எய்தும்.

“திருப்புகழை கற்பார்க்குச் சித்தியெட்டும் எளிதாமோ”
                                            - தணிகைச்சந்நிதிமுறை

செனனமறுக்கைக்குப் பரமுத்திக் கருள்தாராய்:-

பதமுத்தியினும் சிறந்தது பரமுத்தி. அது பெற்றார் பிறவியைப் பெறார்.

கலணை விசித்துப் பக்கரை யிட்டு:-

கல்லணை-குதிரையின் மீது இருக்கின்ற சேணம். பக்கரை-அங்கவடி.

“பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை
   படியெனு முக்ரதுரகம்”                               - திருப்புகழ்

கைகொடுவெற்பை:-

வெற்பு-மலை. இது இங்கு உவமஆகு யெராக யானையைக் குறிக்கின்றது. தும்பிக்கையுங் கொடுமையும் உடைய மலைபோன்ற யானைகள்.

களிமயிலைச் சித்திரத்தில் நடத்தி:-

இங்கே சூரபன்மனுடன்போர் புரியும்போதே முருகன் மயிலில் ஆரோகணித்திருந்தார் என்று அருணகிரியார் கூறுகின்றார்.