பக்கம் எண் :


416 திருப்புகழ் விரிவுரை

 

சூரபன்மன்சக்கரவாகப்பறவை யுருவெடுத்துப் போர் புரிய வந்தபோது இந்திரன் மயிலாகி வந்து முருகவேளைத் தாங்கினான்.

முருகவேளைத் தாங்கும்பேறு பெற்றோமே என்று மகிழ்ந்தான் இந்திரன். அதனால் “களி மயில்” என்றார்.

“பன்னிருநாட்டத்தண்ணல் படர்சிறை மயூரமாகி
முன்னுறு மகவான் தன்மேல் மொய்ம்புடன் புக்குவைகி”
                                                 - கந்தபுராணம்

குலிசன் மகட்குத் தப்பியும்:-

இங்கே முருகவேள் வள்ளியை மணக்கும் பொருட்டுப் புறப்பட்ட போது தெய்வயானையம்மைக்குத் தெரியாமல் போனார் என்று வருகின்றது. அது வஞ்சனையன்று. தெரிந்தால் தெய்வயானையம்மை சினங்கொள்வார் என்பதுமன்று? வேறு ஏன்? கூறுதும்.

திருமாலின் கண்மணிகளில் பிறந்த பெண்மணிகள் அமுதவல்லியும் சுந்தரவல்லியும். இவ்விருவரும் வாழ்க்கையில் பிரியாதிருக்க வேண்டும் என்று கருதி தவஞ்செய்து, முருகனை “எங்கள் இருவரையும் மணந்தருள வேண்டும்” என்று வரம் இரந்தார்கள்.

பெருமான் அவர்களை துரைமகளாகவும், குறமகளாகவும் பிறக்குமாறு பணிந்தருளினார். அதன்படி அமுதவல்லி தானே மகவாகத் தோன்றி ஐராவத யானையால் வளர்க்கப்பட்டு திருப்பரங்குன்றத்தில் திருமுருகனை மணந்துகொண்டார்.

இளையாள் சுந்தரவல்லி வள்ளி மலையில் மான் வயிற்றில் பிறந்து வளர்ந்தாள். முருகன் இதை முன்னமே தெய்வயானைக்கு அறிவித்தால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியுண்டாகும். ஆதலால் முருகன் தெய்வயானையம்மை யுணராதவண்ணம் சென்று வள்ளியை மணந்துகொண்டு சென்றார். இதைக் கண்ட தெய்வயானையம்மை, முன்பிரிந்த தங்கையை மீளவும் சந்தித்ததற்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் பொருட்டு முருகன் அவருக்குத் தெரியாமல் சென்று வள்ளியை மணந்தார் என வுணர்க.

புனத்திற்றிரிவோனே:-

முருகப் பெருமான் வேதமுடிவில் விளையாடும் பாத கமலங்களை வைத்து தினைப்புனத்தின் அருகில் திரிந்தருளினார். தினைப்புனம் என்ன புண்ணியஞ் செய்ததோ?

“சுனையோ டருவித் தினையோடு பசுந்
   தினையோ டிதணோடு திரிந்தவனே”           - கந்தரநுபூதி (40)