இணை பெறவே இனி அருள்வாயே-உமது திருவடிகளைப் பெறுமாறு இனி அருள்புரிவீராக. பொழிப்புரை அலைவீசும் கங்கா நதியைத் தலையிற் சூடிய பசுபதியாகிய சிவபெருமானுடைய புதல்வராகிய ஆறுமுக உருவத்தை யுடையவரே! எல்லாவுயிர்கட்கும் அருள்புரியும் குருமூர்த்தியே! அசுரர்களின் குடிகள் கெடுமாறும், தேவர்கள் தமது அமராவதி நகரில் குடியேறவும், ஒலியுடன் செல்லும் வடிவேலை விடுத்த அதிசூரரே! திருமுடியைப் பிரமன் அறிய வொண்ணாத சிவமூர்த்திக்குக் குருவாகின்றவரே! என்று பூதலத்தில் அடியார் திருக்கூட்டம் தியானிக்கின்ற அழகரே! எல்லாத் தலங்கட்கும் முதலாகிய ஆறுபடை வீடுகளில் எழுந்தருளியவரே! பொயி மயிலின்மீது ஏறிய பெருமிதம் உடையவரே! அலைவீசும் கடலுக்கு நிகராகிய கண்களைக் கொண்டு காமவலை வீசுபவர்கள்; வஞ்சக எண்ணமுடைய மகாபாவிகள்; உபாயத்தால் பலவிதமான செருக்குடன் தாழ்வான அநீதியான பல பேச்சுக்களைப் பேசுபவர்கள்; கீழ்மக்களுடன் உறவு செய்பவர்கள்; அநியாய வழியில் உடலை விற்பவர்கள்; இளைஞர்களின் குடியைக் கெடுப்பவர்கள்` தீமையை நினைக்கின்ற கொடிபோன்றவர்கள் ஆகிய விலைமாதர்களுடன் கூடிய, பாரமான கொங்கையின் மேலே விழுகின்ற கபடனும் முழுமூடனுமாகிய அடியேன், உமது இரு திருவடிகளைப் பெற்று உய்யுமாறு இனி அருள்புரிவீராக. விரிவுரை அலைகடல் நிகராகீய விழிகொடுவலை விசிகள்:- கண்கள் கடல்போல் விசாலமாகத் திகழ்கின்றன. அக்கண்வலை வீசி இளைஞர்களாகிய மீன்களைப் பிடித்துவிடுவார்கள் விலைமகளிர். அபகடமதராய்:- பகடம்-வஞ்சகம். மதர்-செருக்கு. அதநிதமொழி:- அத அநித மொழி. அதம்-தாழ்வு; தாழ்ந்த அநியாய சொற்களைப் பேசுவார்கள். கலைபகர் விலைமாதர்கள்:- கலை-உடம்பு., உடம்பை விலைகூறி விற்பவர்கள். பகர்தல்-விற்றல். |