பக்கம் எண் :


422 திருப்புகழ் விரிவுரை

 

நினைவாகா:-

நினைத்தல்-தியானித்தல். வாகு-அழகு, அழகன்.

சகலமு முதலாகிய அறுபதி:-

எல்லாத் தலங்கட்கும் முதன்மை பெற்று விளங்கும் ஆறு திருப்பதிகள்.

கருத்துரை

ஆறு திருப்பதியில் அமர்கின்ற அழகனே! உனது திருவடி பெற அருள்செய்.

2

ஈனமிகுத் துளபிறவி யணுகாதே
யானுமுனக் கடிமையென      வகையாக
ஞானஅருட் டனையருளி வினைதீர
நாணமகற் றியகருணை      புரிவாயே
தானதவத் தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ      முருகோனே
ஆனதிருப் பதிகமரு ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர்       பெருமாளே

பதவுரை

தான தவத்தினில் மிகுதி பெறுவோனே-அடியார்கள் புரியும் தானத்தின் தகைமையையும் தவத்தின் தியானத்தையும் மிகுதியாகப் பெறுகின்றவரே! சாரதி உத்தமி துணைவ-சரஸ்வதி தேவியாகிய உத்தமியின் சகோதரரே! முருகோனே- முருகக் கடவுளே! ஆனதிருப்பதிகம் அருள் இளையோனே- திருஞானசம்பந்தரை யதிஷ்டித்து தமிழ்மறையாகிய தேவாரப்பதிகங்களைப் பாடிய இளம்பூரணரே! ஆறு திருப்பதியில் வளர்-ஆறுபடை வீட்டுத் திருத்தலங்களில் வளர்கின்ற, பெருமாளே-பெருமையின் மிக்கவரே! ஈனமிகுந்து உளபிறவி அணுகாதே-ஈனமே மிகுந்துள்ள பிறவிக்கடலில் ஆழ்ந்து அழியாமல், யானும் உனக்கு அடிமையென வகையாக அடியேனும் தேவரீருக்கு அடிமை யென்று வகைப்பட்டுள்ள, ஞான அருள்தனை அருளி-மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து, வினைதீர-அடியேனது வினைகள் நீங்க, நாண மகற்றிப் போய் அருளிய திருவருளை அடியேனுக்குத் தந்தருளிவீர்.