பொழிப்புரை தானம் தவம் இவற்றிக்குத் தலைவராக விளங்கி அவற்றின் பயனை மிகவும் பெறுபவரே! வாணிதேவிக்குச் சகோதரரே! முருகக் கடவுளே! திருஞானசம்பந்தரை யதிஷ்டித்து தமிழ் மறையாகிய தேவாரப்பதிகங்களைப் பாடியருளிய இளமை யானவரே! ஆறுபடைவீட்டுத் தலங்களிலும் எழுந்தருளியுள்ளவரே! ஈனமிகுந்த இப்பிறவியை அடியேன் அடையாமல், உமது அடிமையாகி உய்ய சிவஞான அருளைத் தந்து என் வினைதீர, தேவரீரது எளிமையான வான் கருணையை வழங்கியருள்வீர். விரிவுரை ஈனமிகுத்துளபிறவி :- சின்னாள் வாழ்க்கை, பல்வகை நோய், பசி மூப்பு முதலியவை பொருந்தி யிடர் விளைவிப்பதால் ஈனமிகுந்துள பிறவியென்றார். அடிமையென:- ஆண்டானடிமைத்திறத்தையுணர்த்துகின்றனர். அருளதருளி எனையுமனதொ டடிமை கொளவும் வரவேணும் - (திமிரவுததி) திருப்புகழ் நாணமகற்றிய கருணை:- தான் சிவகுருநாதனாக இருந்தும் மூவர் தேவாதிகள் தலைவனாக இருந்தும் குறமாதினிடம் நாணமின்றிச் சென்றவர். அவ்வம்மையை யாட்கொள்ளும் கருணையின் எளிமையே அதற்குக் காரணம். “நான மழிந்துரு மாறியெ வஞ்சக நாடிய பங்கய பதநோவ மாமுனிவன் புணர்மானுதவந்தனி மானைமணஞ் செய்த பெருமாளே” - (பாரநறுங்) திருப்புகழ் சாரதி உத்தமி துணைவ:- திருமாலின் புதல்வராகிய பிரமதேவர் முருகப் பெருமானுக்கு மைத்துனராவார். மைத்துனன் மனைவி சகோதரி முறையாதலின் “சாரதி யுத்தமி துணைவ” என்றனர்; உத்தமியென்று வாணிதேவியை வியந்து பாராட்டுவது சிந்தித்தற்குரியது. ஆனதிருப்பதிகமருள் இளையோனே:- ஞான சம்பந்தராக முருக சொரூபம் பெற்ற அபர சுப்பிரமணியர் அவதரித்தனர். அவரை அதிட்டித்து முருகன் தமிழ் மறையைப் பாடியருளினார் |