அனைத்தும் வழங்கும்பெருமிதம் உடையவரே! தங்கள் எதிரில் வருகின்ற ஆடவர்களை ஓடிச்சென்று வரவேற்று வஞ்சனையால் அவர்களின் நிலையை யறிந்து, ஆசையை ஊட்டி, ஆடவர்கள் தடுக்கி விழும்படி மறைவிடத்தைக் காட்டுகின்ற, மடமாதர்களுடைய, இறை கூடையைக் கொள்கின்ற கிணறு; பழைய அழுக்குகள் ஒழுகுகின்றவழி; ஆராய்ந்து பார்க்கில் இளம் பருவத்துக் கொடிய காதல் ஆற்றில் நிலைக்க முடியாத மிக்க பரப்புள்ள பீழல், மிகவும் அழுகி விழுகின்ற கிழியும் இடம், அழுக்கு சேரும்இடம், ஆடை மூடிய கருவுண்டாகும், துவாரவாசல், அருவிபோல் நீர்பாயும் ஓட்டை, தகுதியற்ற அடிப்பாகம், ஆகிய சேற்றில் அடியேன் அழுந்தாமல் என்னை ஆட்கொண்டருள வேண்டும். விரிவுரை அடிகள் இத்திருப்புகழில்முதற்பகுதியில் பொதுமாதரின் தன்மையைக் குறிப்பிடுகின்றார். விதுரனெடுந்த்ரோண மேற்று எதிர் பொருமம் பாதியேற்று விரகி னெழுந்தோய:- அர்ச்சுனனுடைய வில் காண்டீபம். இது பிரம்மனுடைய வில். விதுரரிடம் இருந்தது விஷ்ணுவின் வில். அது கோதண்டம். விஷ்ணுவில்லை பிரமனுடைய வில் வெல்லாது. ஆதலால் விதுரருடைய வில்லை ஒழிக்கவேணும் என்று கருதினார் கண்ணபிரான். அவர் தூது சென்ற போது, விதுரருடைய திருமாளிகைக்கு எழுந்தருளித் தங்கினார். இதனால் சினங்கொண்ட துரியோதனன் விதுரரை நிந்தித்தான். அதனால் விதுரர் சினங்கொண்டு தன் வில்லை வெட்டிவிட்டு, தீர்த்த யாத்திரை சென்றார். அவரைப் போர் புரியாமல் விலக்கி விட்டார் கிருஷ்ணர். காளிகாட்டில் வருதருமன்:- காளிவாழ்கின்ற இடமாகிய வனத்தில் பன்னிரு ஆண்டுகள் தருமர் துணைவருடன் வாழ்ந்தார். நீற்ற விஜயன்:- அர்ச்சுனன்பரசிவபக்தன். திருநீறுபூசுபவன். சிவபூசை செய்பவன். “ஆசினான்மறைப்படியும் எண்ணில் கோடி ஆகமத்தின்படியும் எழுத்தைந்துங் கூறிப் பூசினான் வடிவமெலாம் விபூதி” - மகாபாரதம். |