வெயில் காலும்-நிலவுடன்வெயிலை வீசுகின்ற, சந்திர சூரியர்தாமும்-சந்திர சூரியரும், அசபையும்-அம்ச மந்திரமும், விந்து நாதமும்-விந்து நாதமும், ஏக, வடிவம்-ஒரே வடிவமாகும். அதன் சொரூபமது ஆக உறைவது-கட்டறிவு அற்று எல்லாம் சிவவடிவாகக் காண்பதுவே, சிவயோகம்-சிவயோகமாம், தங்கள் ஆணவமாயை கரும மலங்கள் போய்-தங்களுடைய ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்கள் அறவே நீங்கப்பெற்று, உபதேசகுரூபர-உபதேசிக்கின்ற குருபரருடைய, சம்ப்ரதாயமொடு-தொன்றுதொட்டு, வருகின்ற நியமத்துடன், ஏயும் நெறி அது-பொருந்துகின்ற வழியை, பெறுவேனோ-அடியேன் பெறக்கடவனோ? பொழிப்புரை போருக்கு வந்த அசுரசேனைகள் (வேற்படையால் அழியும் ஒரு சிறந்த) புகழைப் பெறவும், தேவர்கள் பொன்னாட்டில் குடிபுகுந்து இன்புறவும், நெருங்கிய பூதங்களும் பைசாசங்களும் பசியாறவும், மகிடாசுரனை யழித்தவளும் பயங்கரமான தொழிலை யுடையவளும் வீரத்தில் மிக்கவளுமாகிய காளிதேவி அஞ்சி, “அரஹரா! சங்கரா!” என்று துதி செய்யவும், மாமேருகிரியின் உச்சியில் மிகவும் புழுதி எழவும் வேற்படையை விடுத்துருளீய வயலூராண்டவரே! நெருப்பால் வெந்த திருநீற்றைத் தரிக்கின்ற சடாமகுடத்தையுடைய-மாமுனிவர்கள் பந்த பாசமாய விகாரத்தினாலே தன் வசமற்றிருப்பதை வெல்லற்குக் காரணமான சமாதியை முதிர்ந்த கற்குகையின் கண்கூடுகின்ற மலையின் மேல், மயில்களாகிய நடனமாதர்கள் ஆடவும், இனிய கள்ளுண்டு கரிய வண்டுகளாகிய நட்டுவர் பாடவும். (அவ்வாடலையும் பாடலைவும் கண்டுங் கேட்டும் உள்ளம் உவந்து) கொன்றை மரங்கள் மலர்கள் என்ற பொற்கட்டிகளை மிகுதியாகப் பரிசாக வீசி வழங்கவும், ஆகிய நலங்களுடன் கூடிய விராலிமலையின்கண் எழுந்தருளிய பெருமிதமுடையவரே! ஐந்து பூதங்களும், ஆறு சமயங்களும், மந்திரங்களும், வேதங்களும், புராணங்களும், கலைகளும், ஐம்பத்தொரு வகையான அட்சரங்களும், தேவர்முதல் தாவரம் ஈறாக உள்ள பலவித வடிவங்களையுடைய சர அசரங்களும், உயர்ந்த பிரமதேவனும் திருமாலும், உருத்திரமூர்த்தியும், நிலவையும் வெயிலையும் வீசுகின்ற சந்திர சூரியரும், அம்ச மந்திரமும், விந்துநாதமும் ஒரே வடிவந்தான்! வேறு வேறாகப் பிரித்துச் சுட்டியறிகின்ற அறிவு நீங்கி எல்லாம் சிவமாகப் பார்க்கின்ற அகண்டாகார நிலையில் நிலைத்திருப்பது சிவயோகமாகவும், ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் நீங்கி உபதேச குருபர சம்ப்ரதாயத்துடன் பொருந்தும் நன்னெறியை அடியேன் பெற்று உய்வேனோ? விரிவுரை ஐந்துபூதமும்:- மண், நீர், தீ,காற்று, வெளி என்பன. |