பக்கம் எண் :


6 திருப்புகழ் விரிவுரை

 

வடிவெடுத்து ஒரு வனத்தின் கண் தவம் புரிந்திருந்தனன். திருமால் தாரகனுடன் பொருது தோற்று வைகுண்ட வாழ்க்கையை விட்டு மீன்வடிவெடுத்துக் கடலுள் மறைந்து வாழ்ந்தனர். பிரமதேவர் தமது மனோவதி நகரினின்றும் நீங்கி சீகாழிப் பதியை யடைந்து வாணிதேவியுடன் இருடி வேடந்தரித்து சிவ பெருமானைப் பூசித்துக் கொண்டிருந்தனர். அதனாலே அப்பதி பிரமபுரம் எனப் பெயருற்றது. தாரகனிடம் அக்கினி மடைத்தொழில் புரிந்தான்; வாயு அரண்மனையைக் கூட்டினான்; வருணன் முற்றத்திற்குத் தண்ணீர் தெளித்தான்; இயமன் காலங்காட்டும் மணியை யடித்தான்; இப்படி எல்லாத் தேவர்களும் தத்தமக்கிட்ட ஏவலைப் புரிந்து நொந்து இளைத்தனர். தாரகன் விட்டுணுவின் வைகுண்டத்தில் சித்திரசபையில் வீற்றிருந்து அரசு புரிந்தனன்.

இத்திறத் தமரர் யாவரு மிடைந் தயரவே
முத்திறத் துலகும் வௌவிய முரண்கொளசுரன்
நத்தெடுத்தவ னலங்கொள்பதி நண்ணி யவன்வாழ்
சித்திரச் சபையிருந் தரசுசெய் தனனரோ

இங்ஙனம் வருந்திய தேவர்கள் யாவரும் திருக்கைலாய மலையை யணுகி, சிவபெருமான் சேவடிக் கமலத்தின்மீது வீழ்ந்து வணங்கி, துதித்து தூமலர் தூவித் தொழுது, “கருணை கடவே! கண்ணுதற்கடவுளே! தாரகனால் நாங்கள் செக்கிலிட்ட ளெள்ளுபோல் அரைபட்டு நொந்தோம்; இடர் தீர்த்து எம்மை யாட்கொள்ளும்” என்று முறையிட்டனர். சிவபெருமான் அவரிடம் தீர்க்குமாறு தமது திருவுளத்து நினைத்த மாத்திரையே, ஆறு திருமுகங்களும், பதினெட்டு திருக்கண்களும், அபயம் வாள் சூலம் சக்கரம் முசலம் வேல் என்பனவமைந்த வலக்கரங்களாறும், வரதம் கொடி கேடகம் அங்குசம் பாசம் குலிசம் என்பனவமைந்த இடக்கரங்களாறும், கொண்டு, கோடிசூரியப்பிரகாச முடையவராய் முருகக் கடவுள் அவருடைய இதயத்தினின்றுந் தோன்றி யருளினார். ஆலமுண்ட நீலகண்டர் அவருடைய திருமுகத்தை நோக்கி, “மைந்த! தாரகனை வதைத்து அமரர் அலக்கணை அகற்றுதி” என்று அனுப்பினர். பன்னிருகையுடையப் பரமபதி படையுடன் சென்ற தாரகனுடன் பத்துநாள் போர்புரிந்து வெள்ளிக்கிழமை இரவிலே அவனை வதைத்தருளினார். மாலயனாதி வானவர்களைப் பண்டுபோல் அவரவர் பதத்திலிருத்தி சிவமூர்த்தி யிடம் எய்தினர்.