பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 61

 

மகிழ்ச்சியுடன்தொழுகின்ற குழந்தையாகிய அடியேனை வழிவழியாக அன்புசெய்தொண்டு கொண்டருளிய பெருமிதமுடையவரே! கழுத்தில் கை செருகியாற்றுவதால் மேலெழுந்து சுருண்டு வண்டுகள் மொய்த்துள்ள பருத்த கூந்தல் குலைந்து அலையவும், கலவைச் சாந்து கமழ்கின்ற பருத்த தனங்கள் இளகவும், கூடி மயங்கியும், அன்புறுகின்ற கனி நிகர்த்த அதரத்தைப் பருகியும், துவண்டும், பஞ்சணை மேல் வீழ்ந்தும், இன்பமுற்றும், கரிய கண்கள் பூசலாடி சிவந்து குவியுமாறு, இதஞ்செய்கின்ற உந்தியில் முழுகியும், இனிய சுகத்தில் கலந்து, பொய்யாக நடிக்கும் பரத்தையர்பால் இணங்கிய இளமையானது கிழப்பருவத்தையுடைய முன்னரேயே தேவரீரது திருவடியைப் பெற்று உய்ய உணர்ச்சியை அடையமாட்டேனோ?

விரிவுரை

இளமை கிழம்படுமுன் பதம்பெற உணர்வேனோ:-

கிழப்பவரும்மிகவும் கொடுமையானது; மனைவியும் மக்களும் வெறுப்பர்; நண்பர் அறவே புறக்கணிப்பர்; உடல் நல்ங்குன்றிவிடும்; கண்பார்வை மங்கும்; செவிடுபடும்; உண்டது செமிக்காது; இறைவனைச் சிறிதுநேரம் இருந்து தியானிக்க உடம்பு இடந்தராது. ஆதலால் இளமைப் பருவம் மாறி முதுமைப் பருவம் வருவதற்குள் இறைவனது பதம்பெறுவதற்கு உணரவேண்டும்.

காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலூண் கடைவாய் படுமுன்னே-ஓலஞ்செய்
துற்றா ரழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தீசனையே கூறு.        -பட்டனத்தடிகள்

“நரைவருமென் றெண்ணி நல்லறிவாளர்
   குழுவியிடத்தே துறந்தார்”        - நாலடியார்

முற்பகுதியில் 11 வரிகளில் இளமையை யழிக்க வல்லது இதுவென்றும், அதனின்றும் தப்பி என்று மகலாத இளமையைத் தரவல்ல இளம்பூரணனது இன்னருளைப் பெறுவதற்கு முயலவேண்டும் மென்றுங் குறிப்பிடுகின்றனர்.

பரதசிலம்பு புலம்புமம்பத:-

பரதம் என்பது ஒருவகைக் கூத்து. பாவ, ராக, தாளம் மூன்றுங் கூடியதற்கு பரதம் என்பர். அக்கூத்திற்கு ஆசிரியர் நடராஜமூர்த்தி.

“இன்பத்திறமுதவு பரதகுரு வந்திக்குஞ்சற் குருநாதா”
                                     - (அமுதுததி) திருப்புகழ்.