வயோதிக அதீத-மூப்பைக் கடந்தவரும் ஆகிய சிவபெருமானுடைய, பரமஞான ஊர்பூத-பெரிய ஞான இடத்தில் அடியேன் புகும்படி அருளாயோ-திருவருள் புரிவீராக. பொழிப்புரை வேதங்களை ஓதுகின்ற பிரமன் மிகவும் அஞ்சி ஓடவும். மூதேவி விலகியோடவும், கோபம் மிகவுங் கொண்டு, வடமேருகிரி சுழன்று கலங்கவும், கடல் தீப்பட்டு எரியவும், சூரபன்மன் வாய்கிழியும்படி அழுது மாளவும், ஏழு உலகங்களும், வட்டமாகிய திசைகளை மறைக்கின்ற சக்கிரவாளகிரியும் சாயவும், பேய்க் கூட்டங்களும் பருந்துகளும் கழுகுகளும் ஆடவும், போரை நாடிச்சென்ற, தூய கடப்பமலர் மாலை தரித்தவரே! கருணையில் மேருமலை போன்றவரே! சிறந்த திருவிராலி மலையாகிய இடத்தில் எழுந்தருளியிருக்கும், பெருமிதம் உடையவரே! யானையின் உடலை யழித்தவரும், மன்மதனை அழித்தவரும், திரிபுரங்களை அழித்தவரும், நெருப்பில் முழுகுபவரும், கயிலைமலைக்கு அதிபரும், பிரமகபாலத்தை ஏந்தியவரும், மூங்கிலடியில் தோன்றியவரும், கரத்தில் நெருப்பை ஏந்திய குருநாதரும், மழுவை ஏந்தியவரும், நடு இரவில் ஆடுபவரும், பேய்க்கூட்டங்களுடன் ஆடுபவரும், உலகங்களைக் காக்கும் யோகியும், சிவயோகியும், பெரிய யோகியும், சிறந்த யோகியும், பெரிய பாம்பைச் சடைமுடியில் தரித்தவரும், சொல்லுதற்கு அரிய பெரிய ஞானியும், பசுவில் ஏறுபவரும் பரதக்கூத்து ஆடுபவரும், மயானத்தில் நடிப்பவரும், மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய சிவபெருமானுடைய சிறந்த ஞான உலகில் அடியேன் புகும்படி அருள்புரிவீர். விரிவுரை கரிபுராரி:- கரிபுர அரி. புரம் - சரீரம். தாருகவனத்து முனிவர்கள் அபிசார ஓமம் செய்து அனுப்பிய யானையை உரித்துச் சிவபெருமான் போர்த்தியருளினார். காமாரி:- ஆசையை உண்டுபண்ணுகின்ற அதி தேவதையாகிய மன்மதனை எரித்தவர். தீயாடி:- சிவபெருமான் நெருப்பு மயமானவர். அவருக்கு கார்த்திகை பௌர்ணமியில் நெருப்பினால் அபிஷேகம் புரிய வேண்டும், |