பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 65

 

கார்த்திகை பௌர்ணமியன்று இறைவனை எழுந்தருளப் புரிந்து, கோயிலுக்கு முன் நிறுத்தி, பனை ஒன்றை நிறுவி, ஓலை மூடி, அதில் சிவத்தை ஆவாகனம் புரிந்து கொளுத்துவர். இதனைச் “சொக்கப்பனை கொளுத்துவது” என்கிறார்கள். இது இறைவனை நெருப்பினால் வழிபடுவதாகும்.

கழையோனி:-

சிவபெருமான்மூங்கில் அடியில் முளைத்தருளினார். அதனால் வேய்முத்தர் என்று அவருக்கு ஒரு பேருண்டு.

கரவுதாசனாசாரி

கர உதாசன ஆசாரி, உதாசனன்-அக்கினி. கையில் நெருப்பை ஏந்தியவர்.

“வெங்காட்டுள்அனலேந்தி விளையாடும் பெருமானே”
                                                   - சம்பந்தர்தேவாரம்.

பரசுபாணி:-

பரசு--மழு. மழுவையேந்தியவர்.

“பரசு பாணியர்” -சம்பந்தர்.

பானாளி:-

பான்--நடுஇரவு.

“நள்ளிருளில்நட்டம் பயின்றாடு நாதனே”        - திருவாசகம்

“கழுது கண்படுக்கும்பானாள்”                      - பரஞ்சோதியார்.

கணமொடாடி:-

இறைவர் மகாசம்மார ஊழியாகிய நள்ளிருளில் நடம் புரிவார். பேய்கள் முதலிய சிவகணங்கள் அவருடன் ஆடும்.

கா யோகி:-

கா--காப்பாற்றுகின்ற, அகில வுலகங்களையுங் காப்பாற்றுபவர்.

சிவபெருமான்சிறந்த யோகமூர்த்தி. அதனால் நான்கு முறை யோகி என்று கூறுகின்றார். “காயோகி, சிவயோகி, பரம்யோகி, மாயோகி” என்று அழகிய சொற்களால் அருண கிரிநாதர் சிவபெருமானைக் கூறியருளுகின்றார்.

‘நான் மறைபாடும்பரமயோகி”               - சம்பந்தர்.

பசுவேறி:-

பசு என்பது கட்டுப்பட்டது என்ற பொருளையுடையது.

“பசு ஏறும் எங்கள்பரமன்” -(பலபலவேடமாகும்) சம்பந்தர் தேவாரம்..

பரத மாடி:-

ப-பாவம்; ர-ராகம்; த-தாளம்.