இந்த மூன்றுடன்கூடியது பரதம். பரத நாடகம் புரியும் ஆசிரியர் சிவமூர்த்தி. “நிமிதமென முழவொலி முழங்கச் செங்கைத் தமருகம ததிர் சதியொடன்பர்க் கின்பத் திறமுதவு பரதகுரு” - (அமுதுததிவிட) திருப்புகழ். கானாடி:- சர்வ சங்கார காலத்தில் மகாமயானமாகிய காட்டில் இறைவன் தன்னந்தனியில் நடனம் புரிவான். வயோதிகாதீக:- வயோதிக அதீத. சிவபெருமான் என்றும் இளைவர். பரமஞான ஊர்பூத அருள்வாயே:- புகுத என்ற சொல் பூத என்று வந்தது. சிவலோகம் அடைய அருள் செய்க என்று விண்ணப்பம் செய்கின்றார். சுருதியாடிதாதா:- பிரமன் சதாவேதங்களை ஓதுபவர். அதனால் அவர் வேதன் எனப்படுவார். மூதேவிதுரக:- துரக-அகல. மூதேவியானவள் போரின் அதிர்ச்சியால் அகன்று ஓடிவிட்டாள். சுரதினோடு:- சுரத்தினோடு-என்ற சொல் சுரதினோடு என வந்தது. சுரம் போல் ஓசை செய்து வாய்கிழியும்படி சூரபன்மன் அழுது மாண்டான். திகிரி மாதிராவாரதிகிரி:- திகிரி வட்டமாகிய திசைகளை மூடிய சக்கிரவாளகிரி, மாதிர ஆவாரம். ஆவரம்-மூடுதல். வானீப:- வான்-தூய்மை. நீபம்-கடப்பம். கருணைமேரு:- முருகப்பெருமான் கருணையில் மேரு போன்றவான். கருத்துரை விராலிமலையுறை வேலவரே! சிவலோகம் அடைய அருள்வீர். |