பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 7

 

தாரகன் இருந்த இடம் செங்கற்பட்டிற்கு அருகிலுள்ள “திருக்கூவம்” என்னுந் திருத்தலமாகும். அவனுடன் போர் புரிந்த இடம் “போரூர்” எனப்படும். சமரபுரி என்றும் சொல்லப்படும். இத்தலத்திற்கு சிதம்பர சுவாமிகள் பாடியருளிய மிக்க உயர்ந்த திருவாக்காகிய சந்நிதி முறை ஒன்று உண்டு.

கார்தவழ் மேருவெற்பைக் கடவுளர் வெருவியோட
வேரொடும் பிடுங்கி மீட்டும் வைத்திடும் விறல்கொ டிண்டோட்
டாரகன் றன்னை வெற்றி யறுமுகன் சாய்த்த பின்னர்ச்
சீர்கெழு மவன்றன் மைந்தர் திசைமுகற் பழிச்சலுற்றார்
                                                            - கூர்மபுராணம்

பகவதி :-

ஐஸ்வரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம், என்ற ஆறுகுணங் களையும் உடையவராதலால் “பகவதி” எனப்பட்டனர்.

இகபரமூலா :-

இம்மை நலன்களையும்,மறுமை நலன்களையும் ஒருங்கே யருளவல்லவர் முருகவேள். ஆறுமுகரா தலின் என்க.

“இகபர சௌபாக்ய    மருள்வாயே”         -(வசனமிக) திருப்புகழ்

மரகத  ஆகார ஆயனும்...................................ஈசனும் :-

மால் பிரமன் உருத்திரர் என்ற மூவரும் வணங்கும் முழு முதற் கடவுள் முருகப்பெருமான்.. முத்தொழில்களையும் அம்மூவருக்குங் கொடுத்தவரும் அவரே. அவர்களின் பயங்கெடுக்கும் அபயரும் அப்பரமபதியே.

“படைத்தளித் தழிக்குந் த்ரிமூர்த்திகள் தம்பிரானே”
                                                    - (கனைத்த) திருப்புகழ்.

“படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
             புரக்கக் கஞ்சைமன் பணியாகப்
   பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
             பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா”
                                           - (தடக்கைப்) திருப்புகழ்.

கருத்துரை

சூராதியவுணரை யொழித்த சுப்ரமண்யரே! மூவரும் வணங்கும் முழுமுதலே! விநாகமலை யுறை வேலாயுதரே! உமது திருவடிகட்கு வணக்கம் பல; அடியேனை ஆண்டருள்வீர்.