பசும் பொன்போன்ற கொங்கைகளால், இதயமே மயங்கி-உள்ளம் மயக்கம் பூண்டு-சுக ஆதாரமது ஆய் ஒழுங்கில்-சுகத்தைத் தரக்கூடிய வழியில், ஒழுகாமல்-அடியேன் நடக்காமல், கெடாத தவமே மறைந்து-கெடுதல் இல்லாத தவநெறி மறைந்துபோக, கிலேசம் அதுவே மிகுந்து-துன்பமே மிகவும் பெருகி, கிலாத உடல் ஆவிநொந்து, ஆற்றல் இலாத, உடலில் உயிர் நொந்து, மடியா முன்-இறந்து படு முன்பாக, தொடாய்மறலி நீ என்ற ஆகி அது உன் நா வரும் சொல்-“யமனே! நீ இவனைத் தொடாதே” என்ற சொல் உமது நாவில் வருமோ?, சொல்-அதை எனக்குச் சொல்லி யருளுக. பொழிப்புரை ஏழு உலகங்களையும் ஈன்ற பார்வதிதேவியின் புதல்வரே! நட்டுவைக்கப்படாத சுழிமுனை, மூலாதார முதலிய ஆறாதாரங்கள், விந்து என்ற இவற்றில் நடுவில் விளங்கும் உயிரில் தோன்றி விளங்கும் ஞானமூர்த்தியே! சூரியவொளி போன்ற தூய கூரிய வேலவரே! வெயில் படாத குளிர்ந்த சோலைகள் வனத்தையளாவி உயர்ந்து வளர்ந்து பச்சென்ற நிறத்துடன் தழைத்து? நாள்தோறும் மழை பொழிவதால், பல மலர்த் தடாகங்கள் சூழ்ந்துள்ள, விராலிமலைமீது எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே! தருமஞ் செய்யாதவரைப் புகழ்ந்து, குபேரன் என்று கூறி அவனுடன் கூடி வீணாகத் திரிந்து, இந்தப் பூதலத்தில் தாங்கமுடியாத குடும்பச்சுமையைத் தாங்கி, நினைக்கவும் முடியாத கொடுமையையுடைய கலிபுருஷனால் வாடி, எல்லா வறுமைகளும் தீரும் பொருட்டு உமது திருவருளை விரும்பாது காலங் கழித்தேன்; நெருப்பில் சுடாத பசும் பொன் போன்ற கொங்கைகளால் உள்ளம் மயங்கி, சுகாதாரமான நெறியில் நடக்காமல், கெடுதல் இல்லாத தவநெறியும், மறைந்து போக, துக்கமே மிகவும் பெருகி, வலிமையில்லாத உடம்பில் உயிர் நொந்து இறந்துபோகுமுன் தேவரீர் தோன்றி, “இயமனே! நீ இவன் உயிரைத் தொடாதே” என்ற சொல், உமது நாவில் வருமோ? அதை எனக்குச் சொல்லியருளும். விரிவுரை கொடாதவனையே புகழ்ந்து குபேரனெனவே மொழிந்து குலாவியவமே திரிந்து:- வறுமையின்கொடுமையால் வறியவர்கள், பொருளுடையாரிடம் போய், அவர்களைக் குபேரன் என்றும், பெரிய கொடையாளி யென்றும் கூறிப் புகழ்வார்கள். ஆனால் அவர்கள் ஒரு காசும் கொடுக்காத பரம லோபிகள். |