விரிவுரை மேகமெனுங் குழல் சாய்த்து:- பொது மகளிர்போன்ற இருண்ட கூந்தலைத் தொங்கவிட்டு வீதியில் நின்று இளைஞர்களை வசப்படுத்துவர். “அலங்கை மென்குழலாய்வார் போலே சந்திநின்றய லூடே போவார் அன்பு கொண்ட நீரோ போரீர். அறியீரோ” இரு கோகனகங் கொடுகோத்து:- கோகனகம்-தாமரை;உவமை ஆகுபெயரைக் கண்ணைக் குறிக்கின்றது. தாமரை மலர்போன்ற விழியால் மருட்டி ஆடவரை ஈர்த்து மயக்குவர். தனங்களின் மேற்றுயில் கூறினு மம்புயதாட்டுணை மறவேனே:- “முருகா! மாதர்மீது அன்புகொண்டு அவர் வசமாகி அவரைத் தழுவி உறங்கினாலும் உமது திருவடியை ஒரு சிறிதும் மறவேன்” என்று சுவாமிகள் கூறுகின்றார். “கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண் டயர்கினும் வேல்மறவேன்” -கந்தரலங்காரம் (37) மூவுலகுந் தொழுதேத்திட வுறைவோனே:- முருகவேள் மூவர் தேவாதிகள் தம்பிரான் ஆதலின் சுவர்க்கம், பூதலம், பாதலம் என்று மூன்று உலகத்தவர்களும் வணங்கித் துதிசெய்கிறார்கள். “நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத” -(சிவனார்மனங்) திருப்புகழ் மேருவையம்பினில் வீழ்த்திய மோகன:- மேருவைச்செண்டால் எறிந்த திருவிளையாடல். இதனைத் திருப்புகழ் விரிவுரை முதல் தொகுதி 69-ம்பக்கத்தில் காணலாம். சங்கரி வாழ்த்திட:- சங்கு அரி. சங்கையேந்திய திருமால். இளந்தலை காத்து:- இந்திரன்புதல்வனாகிய சயந்தன் சிறையில் கிடந்து துன்புற்றபோது, ஆறுமகப்பெருமான் அவன் கனவில் தோன்றி அருள்புரிந்தார். அவன் சிறை மீள அருளி, அமரலோக வாழ்வும் வழங்கினார். |