கருத்துரை விராலிமலை மேவு முருகா! எப்போதும் உமது மலரடியை மறவேன். மோதி யிறுகிவட மேரு வெனவளரு மோக முலையசைய வந்துகாயம் மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி மூடமென அறிவு கொண்டதாலே காதி வருமிய தூதர்கயிறுகொடு காலி லிறுகஎனை வந்திழாதே காவ லெனவிரைய வோடி யுனதடிமை காண வருவதினி யெந்தநாளோ ஆதி மறையவனு மாலு முயர்சுடலை யாடு மரனுமிவ ரொன்றதான ஆயி யமலைதிரி சூலி குமரிமக மாயி கவுரியுமை தந்தவாழ்வே சோதி நிலவுகதிர் வீசு மதியின் மிசை தோய வளர்கிரியி னுந்திநீடு சோலை செறிவுளவி ராலி நகரில்வளர் தோகை மயிலுலவு தம்பிரானே. பதவுரை ஆதி மறைனும்-ஆதி மறையவனாகிய பிரமனும், மாலும்-திருமாலும், உயர் சுடலை ஆடும் அரனும்-மயானத்தில் திருநடனம் புரிகின்ற அரனும், இவர் ஒன்றது ஆன ஆயி-இந்த மும்மூர்த்திகட்கும் ஒப்பற்ற அன்னையும், அமலை- மலம் இல்லாதவரும், திரிசூலி-திரிசூலத்தை யேந்தியவரும், குமரி- இளமையானவரும், மகமாயி-பெரியமாயியும், கவுரி-பொன்னிற முடையவரும் ஆகிய, உமை தந்தவாழ்வே-உமாதேவியார் பெற்ற செல்வமே! சோதி நிலவு கதிர் வீசு மதியின் மிசை தோய வளர்கிரியின்-சோதியாகிய ஒளிக்கிரணங்கள் வீசுகின்ற சந்திரன்மீது தோயும் படி வளர்ந்துள்ள மலைமீது, உந்தி நீடு-ஆறு நீண்டுள்ள, சோலை செறிவு உள-சோலைகளும் நெருங்கியுள்ள, விராலி நகரில் வளர்-விராலிமலையில் வீற்றிருக்கின்ற, தோகை மயிலில் உலவு - தோகை மயில் உலாவுகின்ற தம்பிரானே-தனிப்பெருந்தலைவரே! மோதி-ெமேலெழுந்து, இறுகி-திண்ணியதாய், வடமேரு எனவளரும்-வட மேருகிரிபோல் வளர்ந்து, மோகமுலை |