பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 83

 

அசைய-மோகத்தை மூட்டும் தனங்கள் அசைய, வந்து காயம் மோசம் இடும் அவர்கள்-ஆடவர்பால் வந்து உடலால் மோகஞ்செய்கின்ற பொதுமாதர்களின், மாயை தனில் மூழ்கீ-மாயையிலே அடியேன் மூழ்கி, மூடம் என அறிவு கொண்டதாலே-மூடத்தனம் என்னும் படி அறிவைக் கொண்ட காரணத்தால், காதி வரும்-உயிரைப் பிரிக்கவரும், இயமதூதர்-இயமனுடைய தூதர்கள், கயிறு கொடு-பாசக்கயிற்றைக் கொண்டு, காலில் இறுக-பிராணவாயுவுடன் கட்டி, எனை வந்து இழாதே-அடியேனிடம் வந்து இழுக்காமல், காவல் என-அடியேனுக்குக் காவலாக, விரைய ஓடி-விரைந்து ஓடிவந்து-உனது அடிமை காணவருவது இனி எந்த நாளோ-உமது அடியைாகிய சிறியேன் கண்டு உய்யும்படி வருவது இனி எந்த நாளோ?

பொழிப்புரை

ஆதிப்பிரமனும், அரியும், சுடலையில் ஆடும் அரனும் ஆகிய திரிமூர்த்திகட்கும் அன்னையும், மலமற்றவரும் திரிசூலத்தை யுடையவரும், குமரியும், மகமாயியும் பொன்னிறமுடையவரும், ஆகிய உமாதேவியார் பெற்ற செல்வரே! சோதிமயமான ஒளியை எங்கும் வீசுகின்ற சந்திரன்மீது தோயும்படி உயர்ந்து வளர்ந்துள்ளதும், ஆறும், நீண்ட சோலைகளும் நெருங்கியுள்ளதும் ஆகிய விராலிமலைமீது வாழ்பவரே! தோகைமயிலில் உலாவுகின்ற தனிப்பெருந் தலைவரே! மேலோங்கி திண்ணிய தாய வடமேருமலை போல் வளர்ந்து மோகத்தை யூட்டுகின்ற தனங்கள் அசைய வந்து உடல், நலத்தால் மோகஞ்செய்கின்ற பொது மாதர்களின் மாயையில் மூழ்கி, மூடத்தன்மை யென்னும்படியான காரணத்தால், உயிரைப்பற்றி இயமதூதர்கள் வந்து கயிறுகொண்டு பிராணவாயுவுடன் கட்டி என்னை இழுக்காமல், காவலாக நீர் விரைந்து ஓடி அடியேன் கண்டு தெரிசிக்க வருவது இனி எந்த நாளோ?

விரிவுரை

கயிறுகொடு காலிலிறுக எனைவந்திழாதே:-

இயமதூதர்கள்வினைகளின் முடிவில் வந்து பிராணவாயுடன் பாசக்கயிற்றைச் சேர்த்துக் கட்டி இழுத்து உயிரைப் பிரித்துக் கொண்டு போவார்கள்.

கால்-வாயு.

“காலனார் வெங்கொடுந் துதர் பாசங்கொடென்
   காலினார்தந்துடன் கொடுபோக”            -திருப்புகழ்.

காவலென விரைய வோடி:-

முருகவேள் அடியார்க்குக் காவல்காரனாக நின்று அருள்புரிவார்.