பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 93

 

பொழிப்புரை

கும்பகர்ணனுடைய தம்பியாகிய விபீஷணர், அடைக்கலம் புகுமாறு எழுந்து, நம்பிக்கையுடன் இராமருடைய திருமுன் வந்து வணங்கியபோது, இதயம் மகிழ்ந்து இலங்கையில் உள்ள அரக்கர்களின் இரகசியங்களை எடுத்துரைக்க, வெற்றிபெற்ற மேக வண்ணராம் ஸ்ரீராமரது திருமருகரே! மழுவையேந்திய சிவந்த திருக்கரத்தையுடைய சிவபெருமான் வணங்க, பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதரே! வளமை மிகுந்த குன்ற நகரைக் காத்து, அங்குள்ள தூய மலைமீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! அழகு வீசும் நிலாவைப் போன்ற முகவட்டத்தினின்றும் அமுதம் போன்ற திரண்ட இன்னுரையாலும், பாதத்தில் துவண்டு கிடக்கும் தண்டையும், கலீல் என ஒலிக்கும் சிலம்பும், அழகிய சதங்கையும் கொஞ்சும் நடையினாலும், என் உள்ளம் நீர்ச்சுழி போல், சுழல நஞ்சு கலந்து இருகண்களினாலும் அடியேன் கலக்க முற்று, நெருங்கிய இரு தனங்களையுடைய பொதுமாதர்களின் துயரை என்று விடுவேனோ?

விரிவுரை

துயரை என்றொழிந்துவிடுவேனோ:-

ஆசை மூவகைப்படும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை.

மண்ணாசையும்பொன்னாசையும் மனிதனுக்கே உரியவை. மற்றப் பெண்ணாசை புழு முதல் சகல உயிர்களுக்கும் உண்டு. தேவரும் முனிவரும் பெண்ணாசையால் பேதுற்றார்கள். இந்திரனும் சந்திரனும் பெண்ணாசையால் பெருமை குன்றினார்கள். ஆகவே பெண்ணாசையை இறைவனுடைய திருவருள் துணையால் வந்த ஞானவொளியால் விலக்கவேண்டும். ஆதலால் சுவாமிகள் ‘என்று விடுவேனோ?‘ என்று இங்கே வேலவனை வேண்டுகின்றார்.

எழுது கும்ப கன்பினிளைய தம்பி:-

எழுந்து என்ற சொல் சந்தத்தை நோக்கி எழுது என வந்தது.

விபீஷணன், அண்ணனைக் காட்டிக் கொடுத்த சகோதரத் துரோகி என்று சிலர் குறை கூறுவர். இது பிழை.

விபீஷணர்,இராவணன் இனிது வாழவேண்டும் என்று அறிவுரை பல பகர்ந்தார்.

அவர் இராவணனைப் பார்த்து கூறும் இனிய பாடலை இதோ உற்றுப் பாருங்கள்.