பக்கம் எண் :


4திருப்புகழ் விரிவுரை

கைத்தலம்- கையாகிய இடம் என விரித்துப் பொருள் கொள்க.

நிறைகனி- ஞானரசம் பொருந்திய மாதுளங்கனி.

“உவகாரி அன்பர்பணி கலியாணி எந்தையிட
    முறைநாய கங்கவுரி          சிவகாமி
 ஒளிரானையின் கரமில் மகிழ்மா துளங்கனியை
    ஒருநாள் பகிர்ந்தவுமை      யருள்பாலா”
                       
(சிவஞான புண்டரீக) திருப்புகழ்.

இக்கனி விநாயகருக்குச் சிவபெருமானால் தரப்பட்டது. (கைநிறையப் பழம் என்றும் பொருள் கொள்ளலாம்).

விநாயகமூர்த்தி கனிப் பெற்ற வரலாறு

முன்னொரு காலத்து, ஆயிரம் நரம்புகளுடைய மகதி யாழில் வல்லவராகிய நாரதமுனிவர், தமக்கு அரிதிற் கிடைத்த தேவ மாதுளங்கனியைச் சிவபெருமானது திருவடியில் வைத்து வணங்கினர். தீராத இன்பமருளும் பரம காருண்யமூர்த்தியாகிய பரமேஸ்வரன், அக்கனியை ஏற்று நாரதருக்கு நல்லருள் புரிந்தனர்.

பின்னர் விநாயகக் கடவுளும், குமாரக் கடவுளும் தந்தையை வணங்கி அக்கனியை தமக்குத் தருமாறு வேண்டினர். சிவமூர்த்தி அப்பழத்தை இரண்டாகப் பகிர்ந்து அளிக்கலாமன்றோ? அவ்வண்ணமளித்தாரில்லை.

(ஒரு காலத்தில் பிருதிவி முதல் நாதமீறான அளவிலா உலகங்களை யெல்லாம்ஒரு நாளில் சுற்றி வருகின்றவன் எவனோ அவனே தேவர் யாரினும் பெரியோன்; அவனே பரப்பிரமன் என்று தேவர் முதல் பதினெண் கணத்தவர்களுங் கூடிய சபையிலே பேசித் தீர்மானித்தார்கள். அவ்வாறு சுற்றி வருவதற்கு அரியரி பிரமாதியருந் தம்மாலாகாதென வாளாவிருந்தனர்.