பக்கம் எண் :


322 திருப்புகழ் விரிவுரை

 

திருநீறு வினைகளை விலக்குவதன்றி பிறவினைகள் பொருந்தாவண்ணம் கவசமாக நின்று அரண்புரியும்.

       “கங்காளன் பூசங் கவசத் திருநீற்றை
       மங்காமல் பூசி மகிழ்விரே யாமாகில்
       தங்கா வினைகளும் சாரும் சிவகதி”                                          - திருமந்திரம்

சிகரமுற்று :-

சி என்ற ஒரு தனி எழத்து மகா மந்திரமாகும் அது ஏக பஞ்சாட்சரம் எனப்படும். நாயோட்டு மந்திரம் என்றுங் கூறுவர்.

நமசிவய--தூல பஞ்சாட்சம்.

சிவயநம--சூட்சும பஞ்சாட்சரம்.

சிவயசிவ--காரண பஞ்சாட்சரம்.

சிவ--மகா பஞ்சாட்சரம்.

சி--மகாமநு

ந--திரோதம்

ம--ஆணவம்

சி--சிவம்

வ--திருவருள்

ய--ஆன்மா

திரோத சக்தியால் ஆணவமலத்தையகற்றி, திருவருள் துணை கொண்டு ஆன்மா சிவத்தைச் சேர்ந்து பவத்தை யகற்றும். இவ்வைந்தெழுத்தே வேத இருதயமாகி விளங்குவது.

“வேத நான்கினும் மெய்ப் பொருளாவது
       நாதன் நாமம் நமச் சிவாயவே” 
                                       -திருஞானசம்பந்தர்.

விஜயத்தென் திருத்தணி :-

தென்-அழகு. திருத்தணி தன்னை அடுத்து வந்த ஆன்மாக்களின் பாவத்தை அழித்து வெற்றிக் கொள்வது. விசேடமான ஜயம் விஜயம். ஆதலால் உத்தமமான திருத்தலம் திருத்தணிகை பணிவார் வினைகளைத் தணித்து சிவஞானத்தை யருள்வது தணிகாசலம்.

கருத்துரை

திருத்தணிகேசா! தவநெறியுற்று உன் தலவாசம் புரிய அருள்செய்.