|
திருமுறையில் அடங்கியுள்ளன.
(24)
துதித்த
கீரனுக் கின்னருள் சுரந்துநீ முன்போன்
மதித்த நாவலர் குழாத்திடை வதியென மறைநூல்
உதித்த நாவினார் கருணைசெய் துருக்கரந் தயன்சேய்
விதித்த கோயில்புக் கிருந்தனர் விளங்கிழை யோடும். |
(இ
- ள்.) மறைநூல் உதித்தநாவினார் - வேதநூல் தோன்றிய
நாவினையுடைய சோமசுந்தரக் கடவுள், துதித்தகீரனுக்கு - இங்ஙனம் துதித்த
நக்கீரனுக்கு, இன் அருள் சுரந்து - இனிய அருள் சுரந்து, நீ முன்போல் - நீ
முன்போலவே, மதித்த நாவலர் குழாத்திடை வதி எனக் கருணை செய்து -
நின்னை நன்குமதித்த புலவர் கூட்டத்து நடுவிலே தங்குவாயாக வென்று
கூறியருளி, உருக்கரந்து - திருவுருவை ஒளித்து, அயன்சேய் விதித்த
கோயில்புக்கு - பிரமன் புதல்வனாகிய தேவதச்சன் அமைத்த
திருக்கோயிலினுட் புகுந்து, விளங்கிழையோடும் இருந்தனர் - விளக்க மாகிய
அணிகளை அணிந்த உமையம்மையோடும் வீற்றிருந்தனர்.
மதித்த
- யாவரானும் மதிக்கப்பட்ட என்றுமாம். விளங்கிழை,
வினைத்தொகைப் புறத்துப் புறந்த அன்மொழித் தொகை. (25)
கற்ற கீரனுங்
கலைஞருங் கழகமண் டபத்தில்
உற்ற வாடகக் கிழியறுத் தந்தணற் குதவிக்
கொற்ற வேந்தனும் வரிசைகள் சிலசெயக் கொடுப்பித்
தற்ற நீங்கிய கல்வியின் செல்வரா யமர்ந்தார். |
(இ
- ள்,) கற்றகீரனும் கலைஞரும் - பல கலைகளையுங் கற்ற
நக்கீரனும் புலவர்களும், கழக மண்டபத்தில் உற்ற - சங்க மண்டபத்தின்
முன்தூக்கிய, ஆடகக்கிழி அறுத்து அந்தணற்கு உதவி - பொன் முடிப்பை
அறுத்துத் தருமி என்னும் மறையவனுக்குக் கொடுத்து, கொற்ற வேந்தனும்
வரிசைகள் சில செயக் கொடுப்பித்து - வெற்றி வேந்தனாகிய சண்பகமாறனும்
சில வரிசைகள் செய்யுமாறு கொடுப்பித்து, அற்றம் நீங்கிய கல்வியின்
செல்வராய் அமர்ந்தார் - குற்றம் நீங்கிய கல்விச் செல்வராக இருந்தனர்.
அற்றம்
- சோர்வு; குற்றம். கல்வியின், சாரியை அல்வழிக்கண் வந்தது.
(26)
| அறுசீரடியாசிரிய
விருத்தம் |
சம்பக மாற
னென்னுந் தமிழ்நர் தம் பெருமான் கூடல்
அம்பக நுதலி னானை யங்கயற் கண்ணி னாளை
வம்பக நிறைந்த செந்தா மரையடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த வன்பாற் பல்பணி நடாத்தி வைகும். |
|