|  
             (இ 
        - ள்.) இந்த நீர் - இந்தத் தீர்த்தத்தால், எம்மை ஆட்டின் -  
        எம்மைத் திருமஞ்சனஞ் செய்வித்தால், ஏழ் இரண்டு உலகின் - பதினான்கு  
        உலகங்களிலுமுள்ள, மிக்க அந்தம் இல் - உயர்ந்த அழிவில்லாத, தீர்த்தம்  
        எல்லாம் - தீர்த்தங்கள் எல்லாவற்றானும், ஆட்டிய பயன் வந்து எய்தும் -  
        அபிடேகித்தலால் வரும் பயன் வந்து பொருந்தும்; (ஆகையால்), இதில்  
        வந்து மூழ்கி - இதில் வந்து நீராடி, இங்கு வைகும் - இங்கு  
        எழுந்தருளியிருக்கும், நம் குறியை - நமது அருட் குறியாகிய சிவலிங்கத்தை,  
        சிந்தையில் ஆர்வம் பொங்க - உள்ளத்தில் அன்பு மீக்கூர, பூசனை  
        செய்மின் என்னா - பூசனை புரியுங்கள் என்று கூறி எ - று. 
            மிக்க 
        தீர்த்தம் என இயையும். எல்லாம் - எல்லாவற்றானும்.  
        ஆட்டிய : காரணப்பொருட்டு. (14)  
      
	
	விண்ணவர் தம்மின் மேலாம் வேதிய னாகி நின்ற 
			பண்ணவன் றானந் நீரிற் படிந்துதன் னனுஞை யாலே* 
			அண்ணலங் கணத்தி னோரை மூழ்குவித் தனாதி யாய 
			புண்ணிய விலிங்கந் தன்னுட் புகுந்தினி திருந்தான் மன்னோ.  | 
	 
	 
	
		
       
           (இ 
        - ள்.) விண்ணவர் தம்மில் - தேவர்களுள், மேலாம் வேதியன்  
        ஆகி நின்ற பண்ணவன் - உயர்ந்த அந்தணனாகிய இறைவன், தான்  
        அந்நீரில் படிந்து - தான் அத் தீர்த்தத்தில் மூழ்கி, தன் அனுஞையால்  
        -தன் எவலால், அண்ணல் அம் கணத்தினோரை - பெருமை பொருந்திய  
        அழகிய கணத்தலைவர்களை, மூழ்குவித்து - மூழ்கச்செய்து, அனாதியாய  
        புண்ணிய இலிங்கம் தன்னுள் - அனாதியாயுள்ள அறவடிவான  
        இலிங்கத்துள்ளே, புகுந்து இனிது இருந்தான் - போய் இனிமையாக  
        வீற்றிருந்தான் எ - று.      இறைவன் 'அறவாழி யந்தணன்' 
        ஆகலின்  
        மேலாம் வேதியனாகி யென்றார். அம் : சாரியையுமாம். மன், ஓ :  
        அசை. (15)  
      
      
        
	அந்தமா நீரா னந்தி யாதியோர் விதியாற் சோம 
			சுந்தரன் முடிமே லாட்டித் துகளறப் பூசை யாற்றிச் 
			சிந்தையில் விழைந்த வெல்லா மடைந்தனர் செம்பொற் கஞ்சம் 
			வந்தவா றிதுவத் தீர்த்த மகிமையு முரைப்பக் கேண்மின்.
	  | 
	 
	 
		
       
           (இ 
        - ள்.) நந்தி ஆதியோர் - திருநந்தி தேவர் முதலான  
        கணத்தலைவர்கள், அந்தமா நீரால் - அந்தச் சிறந்த தீர்த்தத்தால், விதியால்  
        - ஆகம முறைப்படி, சோமசுந்தரன் முடிமேல் ஆட்டி - சோமசுந்தரக்  
        கடவுளின் திருமுடிமேல் அபிடேகித்து, துகள் அறப் பூசை ஆற்றி -  
        குற்றமறப் பூசித்து, சிந்தையில் விழைந்த எல்லாம் அடைந்தனர் - மனத்தில்  
        விரும்பியன எல்லாவற்றையும் பெற்றனர்; செம்பொன் கஞ்சம் - சிவந்த  
        பொற்றாமரைத் தீர்த்தமானது, வந்து ஆறு இது - தோன்றிய முறை  
        இதுவாகும்; அத் தீர்த்தம் மகிமையும் உரைப்பக் கேண்மின் -  
        அத்தீர்த்தத்தின் பெருமையையும் சொல்லக் கேளுங்கள் எ - று. 
            விழைந்த 
        : வினைப்பெயர்; பெயரெச்சமுமாம். (16) 
       
            (பா 
        - ம்.) * தன்னனுச்சையாலே.   
       |