பக்கம் எண் :

18திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



கோவணமும், ஒட்ட வீக்கிய புலி அதன் உடுக்கையும் - இறுகக் கட்டிய
புலித்தோலாடையும், இடத்தோள் இட்ட யோக பட்டிகையும் -
இடத்தோளிலிட்ட யோகபட்டிகையும், பொன் இடை இடை கட்டப்பட்ட
சுஃறொலி வேத்திரப் படைகையும் படைத்து - பொற்கம்பியால் இடை
யிடையே கட்டப்பட்ட சுஃறென்னும் ஒலியினை யுடைய பிரப்புப் படையினை
ஏந்திய திருக்கையும் ஆகிய இவற்றை யுடையராய்.      

     அடப்பட்ட என்பது அட்ட என நின்றது. கீண்டு - கீழ்ந்து.
சுஃறென்னும் ஒலி என்பது சுஃறொலி யென நின்றது. சுஃறென :
ஒலிக்குறிப்பு; இது பிரம்பைச் சுழற்றி வீசுவதால் உண்டாவது. (5)

வேத கிண்கிணி சிலம்புசூழ்ந் தடிகளின் மிழற்ற
ஓத ரும்பத முளரியூ றருண்மது வொழுகப்
போத வானந்த மதுநுகர்ந் தலர்முகம் பொலியப்
பாத பங்கய முபநிடப் பாதுகை சூட.

     (இ - ள்.) வேதம் கிண் கிணிசிலம்பு சூழ்ந்து அடிகளின் மிழற்ற -
வேதமாகிய கிண்கிணியும் சிலம்பும் சூழ்ந்து திருவடிகளில் ஒலிக்கவும், ஓது
அரும்பதம் முளரி ஊறு அருள்மது ஒழுக - சொல்லுதற்கரிய
திருவடித்தாமரையிற் சுரக்கின்ற அருட்டேனானது ஒழுகவும், போத ஆனந்த
மது நுகர்ந்து அலர் முகம் பொலிய - ஞானானந்தமாகிய தேனைப் பருகி
மலர்ந்த திருமுகமானது விளங்கவும், பாதபங்கயம் உபநிடப் பாதுகை சூட -
திருவடித் தாமரைகளை உபநிடதமாகிய பாதுகை முடியில் அணியவும்.

     இறைவன் ஞானானந்தமயனாய் இருத்தலை ‘போதவானந்த மது
நுகர்ந்து’ என்றார். உபநிடதம் என்பது உபநிடம் என நின்றது. பாதுகையைச்
சூட எனலுமாம். (6)

சிறிது மூரலும் வெயர்வைந் திருமுகத் தரும்பக்
குறுகி யாவணஞ் சித்திர கூடநாற் சந்தி
மறுகு சூளிகை யுபரிகை மாளிகை வாயில்
அறுகு சூழ்நிறை தெற்றியிவ் விடந்தொறு மடைந்து.

     (இ - ள்.) திருமுகத்து சிறிது மூரலும் வெயர்வையும் அரும்ப -
திருமுகத்தின்கண் சிறிது புன்னகையும் வெயர்வும் தோன்ற, குறுகி - சென்று,
ஆவணம் - கடைவீதியும், சித்திரகூடம் - சித்திரகூடமும், நால்சந்தி - நான்கு
தெருக்கள் கூடுமிடமும், மறுகு - வீதியும், சூளிகை உபரிகை -
இறப்பினையுடைய மேல்மாடமும், மாளிகை வாயில் - மாளிகையின் வாயிலும்,
அறுகு நிறை சூழ்தெற்றி - சிங்க வரிசைகள் சூழ்ந்த திண்ணையும் ஆகிய,
இவ்விடந்தொறும் அடைந்து - இவ்விடங்கள் தோறும் போய்.

     சித்திரகூடம் - தெற்றியம்பலம். சூளிகை - நிலாமுற்றமுமாம். அறுகு -
சிங்கம். (7)