தெற்கி ருப்பவர் போல்வட திசைவயிற் சென்று
புக்கி ருப்பதுங் கிழக்குளார் போலமேற் றிசையில்
நக்கி ருப்பதும் யாவரு நாடின ரறியத்
தக்க தன்றியே யிந்திர சாலமாத் தணந்தும்.
|
(இ
- ள்.) தெற்கு இருப்பவர்போல் வடதிசை வயின்சென்று புக்கு
இருப்பதும் - தெற்கில் இருப்பவர்போற் காட்டி வடதிசைக் கண்ணே சென்று
அமர்ந்திருப்பதும், கிழக்கு உளார்போல மேல் திசையில் நக்கு இருப்பதும் -
கிழக்கிலிருப்பவர்போலக் காட்டி மேற்குத் திசையிற் சென்று
மகிழ்ந்திருப்பதும்,யாவரும் நாடினர் அறியத்தக்கது அன்றியே - எவரும்
ஆராய்ந்து அறியக்கூடாவாறு, இந்திர சாலமாக தணந்தும் - இந்திர சாலமாக
நீங்கியும்.
நாடினர்
: முற்றெச்சம்; நாடினர் யாவரும் என இயைத்து,
பார்த்துநின்றவர் யாவரும் என உரைத்தலுமாம். தக்கது - தக்கவாறு.
இந்திரசாலம் - சாலங்களிற் றலையாயது. சாலம் - வலை; பிறரை மயக்கி
வயப்படுத்தும் விஞ்சையைக் குறிப்பதாயிற்று. ஆக வென்பது தொக்கது. (8)
சேய வெற்பினை யணியதாச் செய்துமற் றணித்தாய்
மேய வெற்பினைச் சேயதா விடுத்துமெய்ம் முதுமூப்
பாய மக்களை யிளையவ ராக்கியுங் குதலை
வாய மக்களைக் கழிமுது மக்களா வகுத்தும். |
(இ
- ள்.) சேய வெற்வினை அணியதாச்செய்தும் - தூரத்திலுள்ள
மலையை அண்மையி லுள்ளதாகச் செய்தும், மற்று அணித்தாய் மேய
வெற்பினைச் சேயதா விடுத்தும் - அதற்கு மாறாக அண்மையிலுள்ள
மலையைச் சேய்மையிற் செல்லவிடுத்தும், மெய் முது மூப்பு ஆய மக்களை
இளைவயர் ஆக்கியும் - உடல் முதுமையடைந்த விருத்தர்களை
இளைஞர்களாக்கியும், குதலை வாய மக்களை கழி முதுமக்களா வகுத்தும் -
குதலைச்சொற்கள் பேசும் வாயினையுடைய பாலர்களை மிகுந்த
விருத்தர்களாகக் செய்தும். சேய, வாய என்பன குறிப்புப் பெயரெச்சம். மற்று : வினைமாற்று.
மேவிய, ஆகிய ஆக என்பன விகாரமாயின. (9)
ஆணைப் பெண்ணுரு வாக்கியும் பெண்ணையா ணுருவா
மாணக் காட்டியு மலடியை மகப்பெறச் செய்துங்
கோணற் கூன்செவி டூமைகண் குருடுபங் கெவருங்
காணத் தீர்த்துநா லுலோகமுங் கனகமாச் செய்தும். |
(இ
- ள்.) ஆணைப் பெண்உரு ஆக்கியும் - ஆண் வடிவத்தினைப்
பெண் வடிவமாகச் செய்தும், பெண்ணை ஆண்உருவா மாணக்காட்டியும் -
பெண் வடிவத்தினை ஆண் வடிவமாக மாட்சிமைப்படக் காட்டியும்,
|