பக்கம் எண் :

2திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அழல் வழுதியுடல் குளிப்பப் பதிகமோதிய வரலாற்றை மேல் பாண்டியன்
சுரந்தீர்த்த படலத்திற் காண்க. சேய் - பிள்ளையார். சேயுடை யாரணம்
என்புழி ஆறாவது செய்யுட்கிழமைக்கண் வந்தது; கபிலரது பாட்டு
என்புழிப்போல. திசைகள் எட்டும் தோயுடையார் - திகம்பரர்.

"வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேனெடுங் காலமே"

"குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே"

என்னும் திருநாவுக்கரசர் திருப்பாட்டுக்கள் இங்கே சிந்திக்கற்பாலன. (1)

வேதனெடு மாலாதி விண்ணாடர் மண்ணாடர் விரத யோகர்
மாதவர்யா வருங்காண மணிமுறுவல் சிறிதரும்பி மாடக் கூடல்
நாதனிரு திருக்கரந்தொட் டம்மியின்மேல் வைத்தகய னாட்டச்                                             செல்வி
பாதமல ரெழுபிறவிக் கடனீந்தும் புணையென்பர் பற்றி லாதோர்.

     (இ - ள்.) வேதன் நெடுமால் ஆதி விண்ணாடர் - பிரமனும்
நெடியனாகிய திருமாலும் முதலிய தேவர்களும், மண்ணாடர் -
புவியிலுள்ளாரும், விரதயோகர் மாதவர் யாவரும் -அரிய நோன்பினை
மேற்கொண்ட சிவயோகியரும் பெரிய தவத்தினை யுடைய முனிவரும்
ஆகிய அனைவரும், காண - காணும்படி, மாடக்கூடல் நாதன் -
நான்மாடக்கூடலின் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுள், மணிமுறுவல் சிறிது
அரும்பி - அழகிய புன்னகை முகிழ்த்து, இரு திருக்கரம் தொட்டு -
இரண்டு திருக்கரங்களாலும் தீண்டி, அம்மியின்மேல் வைத்த -
அம்மியின்மேல் வைத்தருளப்பெற்ற, கயல்நாட்டச் செல்வி பாதமலர் -
அங்கயற்கண்ணம்மையின் திருவடி மலர்களை, பற்று இலாதோர் -
இருவகைப் பற்றுமற்ற பெரியோர், எழுபிறவிக் கடல் நீந்தும் புணை என்பர்
- எழுவகைப்பட்ட பிறவியாகிய கடலைக் கடப்பதற்குரிய நாவாய் என்று
கூறுவார்.

     அம்மியின்மேல் வைத்தமை முன் திருமணப்படலத்திற் காண்க.
வைத்த பாதமலர் என்க. பிறவி ஏழாவன தேவர், மக்கள், விலங்கு, புள்,
ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன. பிறவி காரண காரியத்
தொடர்ச்சியாய் அனாதியாக வந்து கொண்டிருத்தலின் அளவிட முடியாத
தென்பார், ‘கடல்’ என்றார். பற்றிலாதோர் - எவ்வகைப் பற்றுமற்று
இறைவன் திருவடியைப் பற்றி நின்றோர்;

"முற்றா வெண்டிங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே"