பக்கம் எண் :

20திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) கடி அவிழ் - மணத்துடன் மலர்ந்த, கடுக்கைவேணி -
கொன்றைமலர் மாலையையணிந்த சடையையுடைய, தாதைபோல் -
தந்தையாராகி சிவபிரான் புரிந்தருளியதுபோல, கனற்கண் - வெப்பு
நோயாகிய தீயின்கண், மீனக்கொடியினை - மீனக்கொடியை உடையவனாகிய
கூன்பாண்டியனை, வேவநோக்கி - வெதும்பி வருந்தும் படியாக
அருள்செய்து, அனையான் - அப்பாண்டியனின் (மனைவியாராகிய), கற்பின்
- கற்பினையுடைய, பிடிஅன நடையாள் - பெண்யானை போலும்
நடையினையுடைய மங்கையர்க்கரசியார், குறையிரந்து வேண்ட - தமது
குறைகூறி வேண்டிக்கொள்ள, பின் - அவ்வாறு வேண்டிய பின்பு, உயிர்
அளித்து - அப்பாண்டியனுக்கு உயிரை நல்கி, காத்த - ஆண்டருளிய,
முடிஅணி - சிகரங்களையுடைய அழகிய, மாடம் - மாடங்களையுடைய, காழ
முனிவனை - சீகாழிப்பதியில் அவதாத்த திருஞான சம்பந்தப்பெருமானை,
வணக்கஞ்செய்வாம் - வணங்குவாம் எ - று.

     ‘கனற்கண் . . . . . காத்த’ என்பது சிலேடை. கனற்கண் - அனல்
விழியால், மீனக்கொடியனை - மீனக்கொடியுடைய மன்மதனை, வேவ
நோக்கி - எரியும்படி பார்த்தருளி, அனையான் கற்பின்பிடிஅன நடையாள்
வேண்ட - அவன் மனைவியாகிய இரதிதேவி வேண்டிக்கொள்ள, பின்
உயிர் அளித்துக் காத்த - பின்பு அம்மன்மதனது உயிரை நல்கிக்
காத்தருளிய, - என்று சிவபிரானுக்கேற்பப் பொருளுரைத்துக் கொள்க.

     காமனை யெரித்த கதை : - சிவபெருமானை யிகழ்ந்து தக்கன் புரிந்த
வேள்வியிற்சென்று அவியுண்ட தீவினையால் அயன், மால் இந்திரன் முதலிய
அமரர்களெல்லாம் அப்பொழுது ஒறுக்கப்பட்ட தன்றிப் பின்னரும்
சூரபன்மன் முதலிய அவுணர்களால் துன்ப முழந்து, அத்துன்பத்தை
யொழிப்பதற்கு இறைவன் மலையரையன் புதல்வியாரை மணந்து
குமாரக்கடவுளைத் தோற்றுவிக்க வேண்டுமெனத் தெளிந்து, அதன்பொருட்டு,
முனிவர்க்கு மெய்ப்பொருளுணர்த்தி யோகிலிருக்கும் பெருமானை
மலரம்பெய்து மோனத்தினின்றும் அகற்றும்படி மன்மதனை வேண்டிக்
கொண்டனர். அவன் அது செய்தற்கு அஞ்சினனாயினும் வேதர்கள் பலவாறு
வேண்டிக் கொண்டதற்கிரங்கிச் சென்று சிவபெருமான்மேல் அம்பினை
யெய்து, அப்பெருமான் சிறிது வழித்தவளவில் நெற்றிக்கண்ணின் நெருப்பால்
எரிந்து சாம்பராயினன். பின் அவன் மனைவியாகிய இரதி வேண்ட,
இறைவன், திருக்கலியாண காலததில் அவனுக்குயிர் நல்கி, இரதிக்கு
உருவுடனும் ஏனையர்க்கு அநங்கனாகவும் இருக்குமாறு அருள்செய்தனர்
என்பது. இதனைக் கந்தபுராணத்துக் காமதகனப் படலம் முதலியவற்றானறிக.

     திருஞானசம்பந்தர் பாண்டியனை வெப்புநோயால் வருந்தச் செய்து,
பின் அது தீர்த்தருளிய வரலாறு : -

     சோழநாட்டிலே சீகாழிப்பதியிலே சிவபாதவிருதயர் என்னும்
அந்தணர்க்குப் பகவதியார் திருவயிற்றிலே திருவவதாரஞ் செய்து மூன்றாம்
ஆண்டிலே பிரமதீர்த்தக்கரையில் சிவபெருமான் உமாதேவி யாரோடும்
வந்து பரஞானம் கலந்த பால் கொடுக்கப்பெற்றுத் ‘தோடுடைய செவியன்’
என்னும் பதிகம்பாடித் தந்தைக்கு இறைவனைச் சுட்டிக்காட்டித்
திருஞானசம்பந்தரென்றும், ஆளுடைய பிள்ளையாரென்றும் பெயரெய்தியவர்