பக்கம் எண் :

214திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) வையாகரணர்கள் - வியாகரண பண்டிதர்களம், நையாயிகர்
- நியாயநூற் புலவர்களும் மறை வல்லோர் - வேத முணர்ந்தவர்களும்,
மறைமுடி சொல் ஆய்வோர் - உபநிடதம் கூறுவதனை ஆராய்வோரும்,
மெய்யாம் மிருதிகள் - உண்மையாகிய மிருதிநூல் கற்றவர்களும், மெய்யா
விரதிகள் - பொய்யா நோன்பினர்களும் - வேள்வித்தழல்களை வாழ்விப்போர் - வேள்வித்தீக்களை ஓம்புவோர்களும், பை ஆடு அரவு அணி ஐ ஆனனன்
உரை பகர்வோர் - படம் விரித்து ஆடுகின்ற பாம்பினை அணிந்த ஐந்து
முகங்களை உடையனாகிய சிவபெருமானது உரையாகிய ஆகமங்களைப்
போதிப்பவர்களும், உலகு அயல் அகல்வோர்கள் - உலகியலினின்றும்
நீங்கியவர்களும், எய்யாது உறைதலின் - வறுமையால் வருந்தாது வசிப்பதனால்,
தென்னாடு நையாத அளகையது என்னப் பொலிவது - பாண்டிநாடானத
வறுமையால் வருந்தாத அளகையைப்போல விளங்காநின்றது.

     வையாகரணர், நையாயிகர் என்பன வடமொழித் தத்திதாந்தங்கள்,
வியாகரணம் - இலக்கணம். நியாயம் - ஆறு தரிசனங்களில் ஒன்று;
அக்கபாதர் என்னும் முனிவரால் உரைக்கப்பட்டது. சொல் : முதனிலைத்
தொழிற்பெயர். மறை முடிசொல் என்பதற்கு வேதத்தின் முடிந்த
பொருளையுணர்த்தும் மாவாக்கியம் என்றுரைத்தலுமாம். மிருதிகள் -
மிருதியைக் கற்றவர்கள்; வினைமுதற் பொருளுணர்த்தும் விகுதி புணர்ந்து
கெட்டது. பொய்யா - பயன் பொய்த்தலில்லாத. இன்னோரெல்லாம் வருந்தாது
உறையச் செல்வம் மிக்கிருத்தலால் அளகை யென்னப் பொலிவ தென்க.
நையாத என்னும் பெயரெச்சத்து அகரந் தொக்கது. அளகையது, அது :
பகுதிப்பொருள் விகுதி. (19)

                       ஆகச் செய்யுள் 1723.