|
திருநாவுக்கரசர்
கடல்கடந்த வரலாறு : - திருமுனைப்பாடி நாட்டிலே
திருவாமூரிலே வேளாளர் குலத்திலே புகழனார் என்பவர்க்கு மாதினியார்
வயிற்றிலே திருவவதாரஞ்செய்த மருணீக்கியாரென்பவர் இளமையிலே
பலகலையுங்கற்று, அறம் பல புரிந்து, உலகநிலையாமை யுணர்ந்து,
உண்மைப்பொருளை ஆராயத்தொடங்கி, நம்பர் அருளாமையினால்,
சமமணசமயமே மெய்ச்சமயமெனத் துணிந்து, அதிற் பிரவேசித்து,
அம்மதநூல் முழுதுங்கற்றுப், புத்தர் முதலானோரை வாதில் வென்று,
தருமசேனர் என்னும் பெயருடன் சமண குரவராய் விளங்கிய காலத்தில்,
அவர் தமக்கையாராகிய திலகவதியம்மையார் திருவதிகைத் திருப்பதியிலே
திருவீரட்டானமுடைய பரமசிவனுக்கு வைகலும் தொண்டுசெய்து வருகின்றவர்
தமது தம்பி யாரைச் சமணசமயத்திலிருந்து மீட்டருளவேண்டுமெனப்
பிரார்த்தித்தபடியே பரங்கருணைத் தடங்கடலாகிய இறைவன், சைவசமயம்
தழைத்தோங்கவும் உலகமெல்லாம் ஈடேறவும், அவரைச் சைவசமயத்திற்கு
மீட்கத் திருவுளம்பற்றி அவருக்குச் சூலைநோய் தந்தருள, அந் நோயானது
சமணக்குருக்கண்மார் செய்த மந்திரமருந்துகளினா லெல்லாம் தணியாது
மேன்மேல் முறுகி வருத்தாநிற்க, அவர் அது பொறுக்கலாற்றாது
திருவதிகைப் பதியை அடைந்து திலகவதி யாரை வணங்கித் திருநீறுபெற்றுத்
தரிததுத் திருவைந்தெழுத்துப தேசம்பெற்று, அவருடன் திருக்கோயிலை
யடைந்து கூற்றாயினவாறு என்னும் பதிகம்பாடிச் சிவபெருமானால்
நோய்நீக்கமும், திருநாவுக்கரசு என்னும் திருப்பெயரும் பெற்றுத்
திகழ்வாராயினர். அதையுணர்ந்த சமணக்குருக்கண்மார் தங்கள் சமயத்திற்கு
ஊனம் வந்துவிடுமென்றஞ்சிச் சமணசமயத்தவனாயிருந்த (மசேந்திரவர்ம
பல்லவ)அரசன்பாற் சென்று, போதித்துத் திருநாவுக்கரசரை யாழைப்பித்து
அவரைக் கொல்லுமாறு தூண்டினர். அரசனும் அவர்கள் கருத்திடறகிணங்கித்
திருநாவுக்கரசரை நீற்றறையிலிட்டு, நஞ்சமருந்தச்செய்தும், அவர்மீது
கொலையானையை ஏவியும், சிவ பெருமான் றிருவருளால் அவற்றானெல்லாம்
அவர் துன்புறாதிருந்த காலைக், கற்றூணிற் பிணித்துக் கடல்நடுவே
யிடச்செய்தான். அப்பொழுது அரசுகள்,
"சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே" |
என்னும் பஞ்சாக்கரப்
பதிகம் பாடிக், கல்லே தெப்பமாக மிதக்க அதில்
ஆரோகணித்துத் திருப்பாதிரிப்புலியூரில் வந்து கரையேறினர் என்பது.
இதன் விரிவைப் பெரிய புராணத்திலுள்ள திருநாவுக்கரசு
நாயனார்
புராணத்திற் காண்க. திருநாவுக்கரசர் இங்ஙனம் கரை யேறிய வரலாற்றை
அவர் தமது திருவாக்கினாலேயே,
"கல்லி னோடெனைப்
பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாம நவிற்றியுய்ந் தேனன்றே" |
எனக் கூறலுங் காண்க.
(19)
|