பக்கம் எண் :

26திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பாசபந்தமாகிய கட்டினை அறுத்த, திருத்தொண்டர் தாள் - பிற
அடியார்களின் திருவடிகளையும், பரவி - துதித்து, பணிதல் செய்வாம் -
வணங்குவாம் எ - று.

     தந்தையின் தாளைத் துணித்தது பாதகச் செயலாயினும் அது
பத்திநெறிக்கண் வல்வினையாகிய சிவபுண்ணியம் ஆயினமையின் அதுவே
பிறவி வேரறுத்து இறைவனடி சார்தற்கு ஏதுவாயிற்று. இதனை,

மெல்வினையே யென்ன வியனுலகி லாற்றரிய
வல்வினையே யென்ன வருமிரண்டும் - சொல்லிற்
சிவதன்ம மாமவற்றிற் சென்றதிலே செல்வாய்
பவகன்ம நீங்கும் படி"
 
""பாதக மென்றும் பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் - சேதிப்பக்
கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
சண்டீசர் தஞ்செயலாற் றான்"


என்னும் திருக்களிற்றுப்படியாரா லறிக.

"வந்து மிகைசெய் தாதைதாள் மழுவாற் றுணித்த மறைச்சிறுவர்
அந்த வுடம்பு தன்னுடனே யரனார் மகனா ராயினார்"

என்று அருண்மொழித்தேவர் கூறுகின்றபடி சிவகுமாரராயினமை யின்
‘மைந்தர்தாள்’ என்றார். வேத நெறி - வைதிகம். சைவநெறி - வேதத்
தெளிவாகிய ஆகம நெறி. பத்திநெறி - வைதிக, சைவநெறிகட்கு
அப்பாற்பட்டுப், ‘பண்டைநற் றவத்தாற் றோன்றிப் பரமனைப் பத்திபண்ணும்
தொண்டு’ நெறி’ தான் : அசை. மைந்தர் தாளையும் திருத்தொண்டர்
தாளையும் பரவி எனக் கூட்டுக.

     சண்டேசர் வரலாறு : - சோழநாட்டிலே திருச்சேய்ஞலூரிலே
மறையோர் குலத்திலே எச்சதத்தன் என்பவருக்குப் பவித்திரை வயிற்றிலே
திருவவதாரஞ் செய்த விசாரசருமர் இளமையிலேயே வேதம் முதலிய
கலைகளையெல்லாம் உணர்ந்து, அவற்றின் பொருட் கெல்லாம்
எல்லையாவது சிவபெருமானது திருவடியே யெனத் தெளிந்து,
சிவபெருமானிடத்துத் தலையன்புடையராய் ஒழுகிவரு நாளில், ஒருநாள்
அவ்வூர் ஆனினங்களை மேய்ப்பானொருவன் ஒரு பசுவினை அடிக்கக்
கண்டு மனம் பொறாராய் ஆவின் மேன்மைகளை யெல்லாம் அவ் வாயனுக்கு
அறிவுறுத்தி அவனை ஆனிரை மேய்ப் பதினின்றும் விலக்கித் தாமே
ஊராருடைய உடன்பாடும் பெற்று நிரைமேய்த்து வருவாராயினர். அவர்
அவைகளை நல்ல புல்லுள்ள இடங்களில் மேயச்செய்து, நறுந் தண்ணீரூட்டி,
நிழலிலமரச்செய்து இங்ஙனம் புரந்து வரும்பொழுது ஆன்களெல்லாம் அழகு
சிறந்து இரவும் பகரும் மடிசுரந்து தாமே பால் பொழிவன வாயின.
ஊராராகிய மறையோர்களும் தம் பசுக்கள் முன்னியிற் பன்மடங்கு பால்
கறத்தல் கண்டு மகிழச்சிமிக்கார்கள். விசாரசருமரும் பசுக்கள் தம்மை யணுகி
அன்பால் பால் சொரிதல் கண்டு, சிவபெருமானுக்குத் திருமஞ்சனஞ் செய்யும்
குறிப்பு உள்ளத்தே நிகழ, மண்ணிநதியின் ஆற்றிடைக் குறையாகிய
மணற்பரப்பில் திரு