|  வேடைநீக்கப் பாகம் 
        நின்று ஆலவட்டம் பணிப்பன போன்ற - வெப்பத் தைப்போக்கப் பக்கத்தில் நின்று விசிறியை அசைத்தலை ஒக்கும்.
       குவையினன்ன 
        : சாரியை நிற்க உருபு தொக்கது. அடிக்கொண்டு - அடித்தல் பொருந்தி; அடித்து, அன்று, ஏ : அசைகள். (34)
 
        
	| வெள்ளமாச் சோரி யீர்ப்ப மிதக்கின்ற தேர்கள் வெம்பேய்ப் பிள்ளைகண் மூழ்கிக் கீழ்போய் மறித்தெனப் பெயர்ந்து வீழ்வ
 தெள்ளுநீர்க் கடலின் மீதூர் சிதைக்கல நிரையுந் தாக்கித்
 துள்ளிமற் றவற்றைச் சாய்க்குஞ் சுறவமும் போன்ற வன்றே.
 |       (இ 
        - ள்.) மாச்சோரி வெள்ளம் ஈர்ப்ப - பெரிய குருதி வெள்ளம் இழுக்க, மிதக்கின்ற தேர்கள் - மிதந்து செல்லுந்தேர்களும்,
 வெம்பேய்ப்பிள்ளைகள் - கொடியபேயின் பிள்ளைகளும், மூழ்கிக்கீழ் போய்
 மறித்தெனப் பெயர்ந்து வீழ்வ - (அப்பிள்ளைகள்) முழுகிக்கீழ்வழியே
 சென்று தாக்குதலால் (அத்தேர்கள்) செல்லு நிலை பெயர்ந்து வீழ்தலும்,
 தெள்ளும் நீர்க்கடலின் மீது ஊர் சிதைக்கலம் நிரையும் - தெளிந்த
 நீரையுடைய கடலின் மேல் ஓடாநின்ற வரிசையாகிய பாய்மரத்தையுடைய
 மரக்கலங்களையும், துள்ளித்தாக்கி அவற்றைச் சாய்க்கும் சுறவமும் -
 மேலெழுந்து தாக்குதலால் அம்மரக்கலங்களை வீழ்த்தும் சுறா மீன்களையும்
 (அவற்றால் அவை வீழ்தலையும்), போன்ற - ஒத்தன.
       தேர்கள் 
        மரக்கலங்களையும் பேய்ப்பிள்ளைகள் சுறவங்களையும், தேர்கள் மறிந்து வீழ்தல் மரக்கலங்கள் சாய்தலையும் ஒத்தன வென்க.
 பேய்கள் குருதி வெள்ளத்தில் மூழ்குமென்பது ஐதிகம். மறித்தென -
 மறிக்க; செய்தென என்னும் வாய்பாட்டு வினையெச்சம். (35)
 
	
	| கத்திநின் றொருபா லீர்ப்பக் கருங்கொடிசேனந் துண்டங் கொத்திநின் றொருபா லீர்ப்பக் குடவயிற் றழல்கட் பூதப்
 பத்திநின் றொருபா லீர்ப்பப் பட்டவ ராகங் கூளி
 பொத்திநின் றொருபா லீர்ப்ப வைம்பொறி போல மன்னோ.
 |       (இ 
        - ள்.) ஐம்பொறி போல - (மனத்தைத் தத்தம் வழி இழுக்கும்) ஐம்பொறிகள் போல, பட்டவர் ஆகம் - மடிந்தவர் உடல்களை, கருங்கொடி
 கத்தி நின்று ஒருபால் ஈர்ப்ப - கரியகாகங்கள் கத்தி நின்று ஒரு பக்கம்
 இழுக்க, சேனம் - பருந்துகள், துண்டம் கொத்தி நின்று ஒருபால் ஈர்ப்ப -
 மூக்கினாற் கொத்தி நின்று ஒருபால் இழுக்க, குடவயிற்று அழல் கண்
 பூதப்பத்தி - குடம் போன்ற வயிற்றையும் எரிகின்ற கண்களையு முடைய
 பூதவரிசைகள், நின்று ஒருபால் ஈர்ப்ப - நின்று ஒரு பால் இழுக்க, கூளி
 பொத்தி நின்று ஒருபால் ஈர்ப்ப - பேய்கள் மொய்த்து நின்று ஒருபால்
 இழுப்பன.
 
       துண்டம் 
        - பறவை மூக்கு. மன், ஓ : அசைகள். (36)   |