பக்கம் எண் :

296திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



மாளிகைகளும், மீன் குலவிய குடுமி - வான்மீன்கள் விளங்கும்
முடியினையுடைய, குன்று இவர் - மலைபோலும் உயர்ந்த, செம்பொன்
கோபுரம் - சிவந்த பொன்னாலாகிய கோபுரங்களும், கொண்டல்
கண்படுக்கும் - முகில் உறங்கும், சுலவு எயில் - சுற்றும் மதில்களும்,
அகழிக் கிடங்கு - அகழ்க்கிடங்குமாகிய இவைகளை, கம்மிய நூல்
தொல்வரம்பு எல்லை கண்டு அமைத்தான் - சிற்ப நூலின் பழமையான
வரம்பினை ஆராய்ந்து செய்தான் எ - று.

     கொடிய என்பதிலுள்ள அகரம் சூளிகை யென்பதனோடு பிரித்துக்
கூட்டப்பட்டது. சூளிகையும் மாளிகையும் என்னலுமாம். தவளமாளிகை -
சுதை பூசினமையால் வெண்மையாகிய மாளிகை; நிலவு விரிதலால்
வெண்மையாகிய மாளிகை யென்றுமாம். இவர் : உவம வுருபுமாம்.
அகழிக்கிடங்கு, வரம்பெல்லை யென்பன ஒரு பொருட் பன்மொழிகள்.
செய்வித்தானைச் செய்தானாகக் கூறினார். இதுகாறும் திருக்கோயி
லமைப்புக்கூறி, மேல் நகரமமைப்புக் கூறுகின்றார்; இறுதியிலுள்ள எயில்
அகழி என்பவற்றை நகருக் குரிய வாக உரைப்பாருமுளர். (38)

சித்திர நிரைத்த பீடிகை மறுகு
     தெற்றிகள் வாணிலாத் தெளிக்கும்
நித்தில நிரைத்த விழாவரு வீதி
     நிழன்மணிச் சாளர வொழுக்கப்
பித்திகை மாடப் பெருந்தெருக் கவலை
     பீடுசால் சதுக்கநற் பொதியில்
பத்தியிற் குயின்ற மன்றுசெய் குன்று
     பருமணி மேடையா டரங்கு.

     (இ - ள்.) சித்திரம் நிரைத்த பீடிகை மறுகு - சித்திரங்களை
வரிசைப்பட எழுதிய கடைவீதிகளும், தெற்றிகள் - தெற்றியம்பலங்களும்,
வாள் நிலாத் தெளிக்கும் - ஒள்ளிய நிலவினை வீசும், நித்திலம் நிரைத்த -
முத்துக்கோவைகளை வரிசைப்படத் தொடுத்த, விழா வரு வீதி -
திருவிழாவில் இறைவன் எழுந்தருளுகின்ற வீதிகளும், நிழல் மணி -
ஒளியினையுடைய மணிகள் பதித்த, சாளர ஒழுக்கம் - சாளர
வரிசைகளையுடைய, பித்திகை மாடப் பெருந்தெரு - சுவர்களையுடைய
மாளிகைகள் நெருங்கிய பெரிய வீதிகளும், கவலை - கவர் வழிகளும்,
பீடுசால் சதுக்கம் - பெருமை நிறைந்த நான்கு தெருக் கூடுமிடங்களும், நல்
பொதியில் - நல்ல அம்பலங்களும், பத்தியில் குயின்ற மன்று - வரிசைப்பட
இயற்றிய மன்றங்களும், செய் குன்று - செய் குன்றுகளும், பருமணி மேடை
- பெரிய மணிகளழுத்திய மேடைகளும், ஆடு அரங்கு - கூத்தவைகளும்
எ - று.

     நடுவில் மரமும் சுற்றிலும் வேதிகையுமுடையது தெற்றியம் பலம்
எனப்படும். பெருந்தெரு - அரச வீதி. கவலை - கவர் வழி; இரண்டு
தெருக்கள் கூடுமிடம். பொதியில் - பொது விடம்; அம்பலம்; நீதிமன்றம்
முதலியன. மன்று - காட்சி மன்றம். (39)