பக்கம் எண் :

சோழனை மடுவில் வீட்டிய படலம்297



காவிரி நாடன் சேனைக் கடலிடை யெரிபோன் மூண்டு
மேவின னென்று கூறி னவன் வேண்ட வானிற்
பூவிரி வாகை நீயே புனையநாம் பொருது மென்னா
நாவிரி யாத மாற்ற நாயகன் கூறக் கேட்டான்.

     (இ - ள்.) காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய சோழன், சேனைக்
கடல் இடை - சேனையாகிய கடலின் நடுவில், எரிபோல் மூண்டு மேவினன்
என்று கூறி - வடவைத் தீப்போல மூண்டுவந்தன னென்று கூறி, மீனவன்
வேண்ட - பாண்டியன் குறையிரப்ப, பூவிரி வாகை நீயே புனைய -
மலர்விரிந்த வாகைமாலையை நீயே அணியுமாறு, நாம் பொருதும் என்னா -
நாம் போர் செய்வோமென்று, நாயகன் - இறைவனாகிய சோமசுந்தரக்
கடவுள், நாவிரியாத மாற்றம் - நாவாற் கூறாத மொழியால், வானில் கூறக்
கேட்டான் - விசும்பின்கண் கூறியருளப் பாண்டியன் கேட்டனன்.

     சேனையைக் கடலென்றமையால் எரி என்றது வடவைத் தீயாயிற்று. பூ
விரி - பொரிவு மிக்க என்றுமாம். நாவிரியாத மாற்றம் - அசரீரி மொழி.
வானிற் கூறவென இயைக்க. (10)

எல்லியங் கமலச் செவ்வி யெனமுக மலர்ந்து நாதன்
அல்லியங் கமலச் செந்தா ளகந்தழீஇப் புறம்பு போந்து
பல்லியந் துவைப்பத் தானைப் பரவையுட் பரிமா வூர்ந்து
கொல்லியம் பொருப்பன் சேனைக் கடலெதிர் குறுகி னானே.

     (இ - ள்.) எல்லி அம் கமலச் செவ்வி என - சூரியனைக் கண்ட
அழகிய தாமரை மலரின் பொலிவைப் போல, முகமலர்ந்து - முக மலர்ச்சி
யுடையவனாய், நாதன் அல்லி அம்கமலச் செந்தாள் - இறைவ னுடைய
அகவிதழையுடைய அழகிய தாமரை மலர்போன்ற சிவந்த திருவடிகளை,
அகம்தழீஇ - உள்ளத்தில் இருத்தி, புறம்பு போந்து - வெளியே வந்து, பல்
இயம் துவைப்ப - பல வாத்தியங்களும் ஒலிக்க, தானைப் பரவையுள் பரிமா
ஊர்ந்து - சேனையாகிய கடலினுள்ளே குதிரையைச் செலுத்தி, கொல்லி அம்
பொருப்பன் - அழகிய கொல்லி மலையையுடைய சோழனது, சேனைக்கடல்
எதிர் குறுகினான் - சேனைக் கடலின் எதிரே சென்றனன்.

     எல்லி - எல்லையுடையது, ஞாயிறு; எல் - ஒளி. எல்லி - பகலுமாம்.
தழீஇ : சொல்லிடையளபெடை. கொல்லி மலை சேரர்க்குரிய தாயினும்
ஓரொருகால் சோழரால் வென்று அடிப்படுத்தப் பெற்ற தென்று கருதிச்
சோழனைக் கொல்லியம் பொருப்பன் என்றார் போலும். அதனை
மூவேந்தர்க்கும் உரியதாகக் கூறிய செய்யுட்களும் உண்டு. கேட்டவன்
மலர்ந்து போந்து ஊர்ந்து குறுகினான் என வினை முடிக்க. (11)