பக்கம் எண் :

உலவாக்கோட்டை யருளிய படலம்309



     (இ - ள்.) அறக்குன்று அனையான் - புண்ணிய மலை போன்ற
அடியார்க்கு நல்லான், இறக்கும் உடம்பால் - இறந்து படுகின்ற
இவ்வுடம்பினால், இனி பெறும் பேறு யாவது என்னா - (நமது விரதந்
தடைப்பட்ட) பின் நாம் அடையும் பயன் யாது என்று கருதி, மனையோடும்
அடைந்து - மனைவியோடுஞ் சென்று, இச்செய்தி - இச் செய்தியை,
நிறக்கின்ற செம்பொன் சிலையார்க்கு நிகழ்த்தி - விளங்குகின்ற சிவந்த
பொன்மலையை வில்லாகவுடைய சோமசுந்தரக் கடவுளுக்குக் கூறி, ஆவி
துறக்கின்றதுவே துணிவு என்று துணிந்து போனான் - உயிரை விடுதலே
முடிவு என்று மனம் துணிந்து சென்றனன்.

     என்றேனும் அழியும் இயல்பினதாகிய இவ்வுடம்பை நியமந் தவறிய
பின்னரும் வைத்திருத்தலால் எய்தலாகும் பயனொன்றுமின்மையால்,
இப்பொழுதே அதனை விடுத்தல் செயற்பாலதாமென்று துணிந்தனன் என்க.
உடல் என்றேனும் அழியுமென்பதனை,

"மின்போ லழியும் வயிற்றாமை வடிவா யழியு மெய்யுருவாய்
முன்போ லழியும் பிறந்தழியு மடவா ருடனே முயங்கியதன்
பின்போ யழியு நரைத்தழியும் பேய்போற் றிருந்து                                      பெயர்ந்தழியும்
பொன்போல் வளர்த்து மிவ்வுடலம் நிலையா தழிந்து                                      போய்விடுமே"

என்னும் செவ்வந்திப் புராணச் செய்யுள் நன்கு விளக்குகின்றது. சலியாமையும் பெருமையும் பற்றி "அறக்குன் றனையான்" என்றார். நிறக்கின்ற : பெயரடியாகத் தோன்றிய வினை. அனையான் யாவதென்னா, துணிவென்று துணிந்து போனான் என்க. (10)

ஐயன் றிருமுன்ன ரடைந்தடி தாழ்ந்து வானோர்
உய்யும் படிநஞ் சமுதுண்ட வொருவ வுன்றன்
மெய்யன்பர் பூசைக் கிடையூறு விளைய வென்றன்*
செய்யும் புலமும் விளைவின்றிச் சிதைந்த வென்னா.

     (இ - ள்.) ஐயன் திருமுன்னர் அடைந்து - சிவபெருமானது
திருமுன்னர்ச் சென்று, அடிதாழ்ந்து - திருவடியில் வீழ்ந்து வணங்கி,
வானோர் உய்யும்படி நஞ்சு அமுது உண்ட ஒருவ - தேவர்கள் உய்யுமாறு
நஞ்சினை அமுதாக உண்டருளிய ஒப்பற்றவனே, உன் தன் மெய் அன்பர்
பூசைக்கு இடையூறு விளைய - உனது மெய்யடியார்கள் பூசைக்கு
இடையூறுண்டாக, என் தன் செய்யும் புலமு விளைவு இன்றிச் சிதைந்த
என்னா - என்னுடைய நன் செய்யும் புன் செய்யும் விளைவு சுருங்கிக்
கெட்டன என்று கூறி (மற்றும்).

     வானோர் உய்யும் பொருட்டு நஞ்சையும் உண்ட பேரருளாளனாகிய
நின்னடியார் பூசை முட்டின்றி முடியும்படி அருள் செய்தல் கடன் என்னும்
கருத்தினைக் கொண்டிருத்தலால் நஞ்சமுதுண்ட ஒருவ என்றது கருத்துடை
யடையணி.
தன் இரண்டும் சாரியை. செய்யும் புலமும் என வேறு
கூறினமையால் நன்செயும் புன் செயும் என்க. (11)


     (பா - ம்.) * இன்றென்.