பக்கம் எண் :

32திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"அவையடக் கியலே யரிறபத் தெரியின்
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்
றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே"

என்னும் தொல்காப்பியச் செய்யுளிற் சூத்திரத்தானறிக. ‘அவை
யடக்கியலைக் குற்றமற ஆராயின் அறியாதன சொல்லினும் பாகு படுத்துக்
கோடல்வேண்டுமென்று எல்லா மாந்தர்க்கும் தாழ்ந்து கூறல் என்றவாறு’
என்பது இதற்கு இளம்பூரணர் கூறிய உரை. "வாயுறை வாழ்த்தே யவையடக்
கியலே" என்னும் செய்யுளியற் சூத்திரவுரையில், பேராசிரியர்,
‘அடக்கியலென்பது வினைத்தொகை; தானடங்குதலாயின் அடங்கியலென
வேண்டும்; அஃதாவது அவை யத்தாரடங்குமாற்றால் இனியவாகச் சொல்லி
அவரைப் புகழ்தல்’ என்று கூறியிருப்பதும் இங்கே கருதற்பாலது. (29)

                    ஆகச் செய்யுள் - 30