பக்கம் எண் :

வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்333



இயமான னிந்திரவி யெரிவா னிலஞ்சலில
     மெறிகா லெனும்பகுதி யிருநான்
மயமான சுந்தரனை மனம்வாய்மெய் யன்பினிறை
     வழிபா டடைந்தவர குணனாய்ச்
சயவேளை வென்றவடி வினனீரில் வென்றிபெறு
     சதவேள்வி யிந்திரனை நிகர்வோன்
இயன்மேனி கொண்டவொளி யினிலேழ் பசும்புரவி
     யினன்றேசு* வென்றவர குணனே.

     (இ - ள்.) இயமானன் இந்து இரவி - ஆன்மாவும் திங்களும்
ஞாயிறும், எரிவான் நிலம் சலிலம் எறி கால் எனும் - நெருப்பும் வானும்
நிலமும் நீரும் வீசுகின்ற காற்றுமாகிய, இரு நால் பகுதி மயமான சுந்தரனை
- எண் பகுதியின் மயமாகிய சோமசுந்தரக் கடவுளை, மனம் வாய் மெய்
அன்பில் நிறை வழிபாடு அடைந்த வரகுணனாய் - மனம் மொழி
மெய்யென்னும் மூன்று கரணங்களினாலும் மெய்யன்பு நிறைந்த
வழிபாட்டினைப் பொருந்திய சிறந்த குணத்தையுடையவனாய், இயல் மேனி
கொண்ட ஒளியினில் - இலக்கணமமைந்த வடிவத்திலுள்ள ஒளியினால், ஏழ்
பசும் புரவி இனன் தேசு வென்ற வரகுணன் - ஏழு பச்சைக்
குதிரைகளையுடைய சூரியன் ஒளியையும் வென்ற வரகுண பாண்டியன்
என்பான், சயவேளை வென்ற வடிவினன் - (அழகினால்) வெற்றியையுடைய
மதவேளையும் வென்ற வடிவத்தையுடையவன்; ஈறு இல் வென்றி பெறு
சதவேள்வி இந்திரனை நிகர்வோன் - (வேள்வி யியற்றுதலால்) அழிவில்லாத
வெற்றி பொருந்திய நூறு வேள்வியினையுடைய இந்திரனையொப்போன்.

     இயமானன் - எஜமானன் என்பதன் றிரிபு. எஜமானன் -
வேள்வியியற்றிய ஆன்மா. இருநாற் பகுதி மயமான என மாறுக. அட்ட
மூர்த்தத்தை,

"இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகி"

என்று தாண்டக வேந்தர் அருளிச் செய்தலுங் காண்க. வரகுணன் -
மேலாகிய குணமுடையவன். வழிபாடடைந்த வரகுணனாய் என்றமையால்
அவன் பெயர் அக்காரணத்தாலெய்தியதென்பது குறிப்பித்தவாறாயிற்று.
வேள்வியால் இந்திரனை நிகர்வோன் என ஏது வருவிக்க. இனன் -
சூரியன். (2)

மறையாதி கலைபலவு மகமாதி பலவினையும்
     வழுவாது நிறுவுதலின் மலர்மேல்
இறையாகி மலர்வனிதை பிரிவான+திருமகளி
     ரிகபோகம் விளையமுறை செயலாற்

     (பா - ம்.) * இனதேசு. +பிறிவான.