பக்கம் எண் :

346திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) திருப்பணி பலவும் செய்து - பல திருப்பணிகளையுஞ்
செய்து முடித்து, தென் திசை வழிக் கொண்டு ஏகி - தென்றிசையின் வழிக்
கொண்டு சென்று, சுரும்பு அணி நெடு நாண் பூட்டும் - வண்டுகளின்
வரிசையாகிய நெடிய நாண் பூட்டிய, சுவைத்தண்டச் சிலையான் காய்ந்த -
கரும்பு வில்லையுடைய மதவேளை எரித்தருளிய, மருப்பு அணி சடையான்
கோயில் - பன்றிக் கொம்பினை அணிந்த சடையையுடைய சிவபெருமான்
வீற்றிருக்குந் திருக்கோயிலை, வழிதொறும் தொழுது போற்றி - வழிதோறும்
வணங்கித் துதித்து, பொருப்பு அணிமாடக் கூடல் பொன் நகர் அடைந்தான்
- மலைகளின் வரிசை போல (ஓங்கிய) மாடங்களையுடைய மதுரை என்னுந்
திருநகரை அடைந்தனன்.

     சுருப்பு - சுரும்பு : வலித்தல். சுவைத்தண்டம் - கரும்பு. சடையான்
கோயில் வழிதொறும் தொழுது என்பதற்கு மருதவாணர் கோயிலை
வழிதொறும் திரும்பி நோக்கித் தொழுது என்றுரைக்க; அன்றி, வழிதொறும்
உள்ள இறைவன் கோயில்களைத் தொழுது என்றுமாம். மன்னும் ஓவும்
அசைகள். வரகுணதேவரது அன்பின் பெருக்கையும், அவர் இடைமருதில்
இயற்றிக் கொண்டிருந்த திருத்தொண்டின் திறத்தையும்,

"வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும்
ஓடும் பன்னரி யூளைகேட் டரனைப்
பாடின வென்று படாம்பல வளித்தும்
குவளைப் புனலிற் றவளை யரற்ற
ஈசன் றன்னை யேத்தின வென்று
காசும் பொன்னுங் கலந்து தூவியும்
வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை யெள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவ னெச்சிலை நுகர்ந்தும்
மருத வட்டத் தொருதனிக் கிடந்த
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம்மித் தலையும்
கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும்
கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்தன வென்று நாய்க்கட்ட மெடுத்தும்
காம்புகுத் துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய வன்பின் வரகுண தேவரும்"

என்று திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில், பட்டினத்தடிகள
அருளிச் செய்தல் காண்க. (25)