பக்கம் எண் :

விறகுவிற்ற படலம்401



செய்வித்து - மாடங்கள் நிறைந்த நீண்ட நகரினை வலஞ் செய்வித்து,
மலர்ந்த சித்தம் ஆழ்ந்திட - மலர்ந்த அவன் மனம் உவகைக் கடலில்
அமிழ்ந்த, வரிசைகள் மிதப்புறச் செய்து - வரிசைகளை நிறையச் செய்து,
தன்மனை புகுவான் - தனது மனையிற் புகுகின்றவனாகிய, தத்தும் மான்
தொடைத் தேரினான் - தாவுகின்ற குதிரைகள் பூட்டிய தேரையுடைய
பாண்டியன்.

     மிதப்புற - மிக. தொடை - பூட்டு. புகுவானாகிய தேரினான் என்க.
(67)

தேவ ருந்தவ முனிவருந் தேவரிற் சிறந்தோர்
யாவ ருந்தமக் காட்செய விருப்பவ ரிருதாள்
நோவ வந்துமக் காட்செய்து நுங்குறை முடிப்பார்
ஆவ ரேலுமக் கனைவரு மேவல் ரன்றோ.

     (இ - ள்.) தேவரும் தவமுனிவரும் தேவரில் சிறந்தோர் யாவரும் -
தேவர்களும் தவத்தினையுடைய முனிவர்களும் தேவர்களிற்சிறந்த திருமால்
முதலிய அனைவரும், தமக்கு ஆள்செய்ய இருப்பவர் - தமக்குக் குற்றேவல்
செய்ய வீற்றிருப்பவராகிய இறைவர், இருதாள் நோவ வந்து - இரண்டு
திருவடிகளும் வருந்த வந்து, உமக்கு ஆள்செய்து - உமக்கு ஏவல் செய்து,
நும்குறை முடிப்பார் ஆவரேல் - உமது குறையினை முடிப்பாராயின்,
உமக்கு அனைவரும் ஏவலர் அன்றோ - உமக்கு அனைவரும் ஏவலாளர்
அல்லவோ?

     அனைவரும் - அத்தேவர் முதலாயினாரும் புவியின் மாந்தரனை
வரும். (68)

ஆத லாலெனக் குடையர் நீ ருமக்குநா னடியேன்
ஈத லாலெனக் கும்மொடு வழக்குவே றிலைநான்
ஓத லாவதோர் குறையுள தின்றுதொட் டுமக்கு
வேத நாதனைப் பாடலே கடனென விடுத்தான்.

     (இ - ள்.) ஆதலால் - ஆகையால், எனக்கு உடையர் நீர் - என்னை
யுடைய தலைவர் நீர்; நான் உமக்கு அடியேன் - நான் நுமக்கு அடிமை; ஈது
அல்லால் - நீர் தலைவரும் யான் அடிமையுமாகிய இந்த முறையே யன்றி,
எனக்கு உம்மொடு வேறு வழக்கு இலை - அடியேனுக்கு உம்முடன் வேறு
வழக்கு இல்லை; நான் ஓதல் ஆவதோர் குறை உளது - இன்னும் நான்
கூறக்கடவதாகிய குறை ஒன்று உளது; (அது), இன்று தொட்டு - இன்று முதல்,
உமக்கு வேத நாதனைப் பாடலே கடன் என விடுத்தான் - உமக்கு
வேதநாதனாகிய இறைவனைப் பாடுதலே கடமை என்று வேண்டி
அனுப்பினான்.

     நீர் முன்போல் அரசவைக் கண் வந்து பாடுதல் மரபன்றென்பார்
‘எனக் கும்மொடு வழக்கு வேறிலை’ என்றார். (69)