பக்கம் எண் :

402திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அருமறை வணங்குங் கோயிற் கதவினை யடைக்கப் பாடிப்
பரனுறை பதிக ளெங்குந் தொழுதனர் பாடிப் பாடி
வருமவர் நுங்க ணாட்டு வணங்கவும் வருவ ரென்னத்
தருமநூ லணிந்த தெய்வத் தாபதன் சாற்ற லோடும்.

     (இ - ள்.) அருமறை வணங்கும் கோயில் கதவினை அடைக்கப் பாடி
- அரிய வேதங்கள் வழிபடுந் திருக்கோயிற் கதவு அடைக்குமாறு பாடி
யருளி, பரன் உறை பதிகள் எங்கும் தொழுதனர் - இறைவன் எழுந்தருளிய
திருப்பதிகளனைத்திலும் சென்று வணங்கி, பாடிப்பாடி வருமவர் - திரு
நெறித் தமிழ்மறை பாடிப்பாடி வருகின்ற அவ்வாளுடையபிள்ளையார், நுங்கள்
நாட்டும் வணங்க வருவர் என்ன - நுமது நாட்டிற்கும் சோமசுந்தரக்
கடவுளை வணங்க வருவர் என்று, தருமம் நூல் அணிந்த தெய்வத்தாபதன்
சாற்றலோடும் - அறநெறி வழாத முந்நூலணிந்த தெய்வத் தன்மை
பொருந்திய அம்முனிவன் சொல்லியவளவில்.

     திருமறைக்காட்டிலே வேதங்களாற் பூசித்துத் திருக் காப்பிடப் பெற்ற
திருக் கோயிற் கதவினைத் திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடித் திறக்க,
இருவரும் அவ்வாயிலால் உட்சென்று இறைவரைத் தரிசித்துப் புறம்
போந்தபின் திருஞான சம்பந்தர் பதிகம்பாடி அதனைத் திருக்காப்பிட்டனர்
என்னும் வரலாற்றைப் பெரிய புராணத்தாலறிக. தரும நூல் - அறவடிவாகிய
நூல் என்றுமாம். (24)

கற்பலர் கொடியன் னாருந் தென்னவன் கண்போல் வாரும்
அற்புரை யமண்பே யோட்டி யன்றுதங் கோமான் மெய்யிற்
பொற்புறு நீறு கண்டு பூதிசாதனத்தா லெய்துஞ்
சிற்பர வீடு கண்ட மகிழ்ச்சியுட் டிளைத்தோ ரானார்.

     (இ - ள்.) கற்பு அலர் கொடி அன்னாரும் - கற்பாகிய மலர் மலர்ந்த
கொடி போல்வாராகிய மங்கையர்க்கரசியாரும், தென்னவன் கண் போல்
வாரும் - பாண்டியன் கண்போல்வராகிய குலச்சிறையாரும், அன்று -
அப்பொழுதே, அல் புரை அமண் பேய் ஓட்டி - இருளை யொத்த சமணப்
பேயினைத் துரத்தி, தம் கோமான் மெய்யில் பொற்பு உறு நீறுகண்டு - தமது
தலைவன் மேனியில் அழகு மிக்க திரு நீற்றினையுங் கண்டு, பூதி
சாதனத்தால் எய்தும் - பூதி சாதனத்தாலடையும். சிற்பர வீடு கண்ட
மகிழ்ச்சியுள் - ஞான மயமாகிய பர வீட்டினைக் காணுதலால் விளையுஞ்
சிவானந்தத்தில், திளைத்தோர் ஆனார்- அழுந்தியவ ராயினர்.

     மங்கையர்க்கரசியாரின் கற்பு மேம்பாட்டை வியந்துரைப்பார் ‘கற்பு
அலர் கொடியன்னார்’ என்றார். இஃது இல்பொருளுவமை. அரசன் தீ
நெறியிற் செல்லின் தடுத்து நன்னெறிச் செலுத்தும் இயல்புடையா ரென்பார்
குலச்சிறையாரைத் ‘தென்னவன் கண் போல்வார்’ என்றார். அவ்வுரை
கேட்டவளவில், அமணினை ஓட்டுதலும் அரசன் நீறு தரித்தலும் யாவரும்
பரவீடெய்துதலும் உறுதி யெனத் தெளிந்தாராகலின் அவைலை அப்பொழுதே
எய்தினாற் போல மகிழ்ச்சியடைந்தனர் என்க. (25)